5 முக்கிய நாடுகளின் அனுமதி தேவை தமிழீழத்தை உருவாக்க!

தமிழீழத்தை உருவாக்க வேண்டுமாக இருந்தால் 5 முக்கிய நாடுகளின் அனுமதியுடன் தான் எமது அந்த இலக்கை அடையமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

துறைநீலாவணையில் வேட்பாளர் சரவணமுத்துவை ஆதரித்து நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

எமது இனத்தின் உச்ச பலம் என்பது விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் சரி, அரசியல் வரலாற்றிலும் சரி விடுதலைப்புலிகளின் காலத்திலேதான் மிகவும் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. இதனை எவராலும் மறுக்க முடியாது.

விடுதலைப்புலிகள் ஜனநாயக ரீதியாக அடக்குமுறைக்குள் உள்ளாகி இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் எமது மக்கள் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார்கள்.

அந்த நேரத்தில் அவர்களது ஆயுத போராட்டம் என்பது மிகவும் உச்ச நிலையில் இருந்தது. அப்போதே எமது மக்கள் த.தே.கூட்டமைப்பினை மிகப்பலமாக ஆதரித்து அதிகப்படியான உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

அந்த நேரத்தில் த.தே.கூட்டமைப்பினராகிய நாங்கள் ஆயுதமேந்தாமலும், அதில் பங்கெடுக்காமலும் விடுதலைப்புலிகளுடன் ஒரு புரிந்துணர்வோடு எங்களது அனுசரணையை கொடுத்திருந்த காலந்தான் போராட்ட வரலாற்றில் ஒரு உச்சமான காலமாயிருந்தது. அந்த காலத்தினை தற்போது இழந்திருக்கின்றோம்.

விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் சர்வதேச ராஜதந்திர நடடிவக்கைகளை விடுதலைப்புலிகள் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கூறினார்கள்.

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் அராஜகமான ஆட்சியினை மாற்றி அமைத்து மக்கள் எமது நீண்டநாள் பிரச்சினைகளுக்கு நிருந்தரத்தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக சதி வேலைகள் செய்யாமல், ஆயுதப்புரட்சி இல்லாமல், போர் இல்லாமல் எமது மக்களினதும், முஸ்லிம், மலையக மக்களினதும் முழு ஆதரவுடன் ராஜதந்திர ரீதியாக ஆட்சியை மாற்றியமைத்தோம் அதனை சர்வதேசமும் பாராட்டியது.

இங்கு நடைபெற்ற போராட்டத்திலே இலங்கை அரசாங்கமானது தமிழ்மக்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்தார்கள்.

அந்த விடயமானது உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஐ.நாவின் தீர்மானங்களின் அடிப்படையில் ஐ.நா மனித உரிமை பேரவையில் அது ஒரு போர்க்குற்றம் என்று த.தே.கூட்டமைப்புக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது.

அந்த பிரேரணையை 2012ஆம் ஆண்டு ஐக்கியநாட்டு சபைக்கு கொண்டுவந்த போது 47 நாடுகள் அங்கம் வகிக்கும் அந்த சபையிலே 24 வாக்குகள் அமெரிக்காவின் நடவடிக்கை மூலம் கிடைத்து அதன்காரணமாக 2012ஆம் ஆண்டு அந்தப்பிரேரணை ஐக்கிய நாட்டு சபையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் மக்களினது நீண்ட நாள் பிரச்சினையாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வை கான்பதற்கு உலக நாடுகள் அத்தனையும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

அந்தவகையிலேதான் த.தே.கூட்டமைப்பானது சர்வதேச நாடுகளுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றோம்.

அவ்வாறான உறவை சர்வதேசத்துடன் பேணிவருகின்ற சந்தர்ப்பத்திலேதான் நாங்கள் தனிநாடாக உருவாக்க வேண்டுமானாலும் சரி அப்படி ஒரு நாட்டை பிரகடனப்படுத்த வேண்டுமாக இருந்தாலும் சரி பக்கத்து நாடு உட்பட உலக நாடுகள் ஐக்கிய நாட்டு சபையிலே பாதுகாப்பு சபையூடாக 5 முக்கிய நாடுகளின் அனுமதியுடன்தான் எமது அந்த இலக்கை அடையமுடியும் என தெரிவித்துள்ளார்.