மஹிந்த யாழில் அமைத்த ஜனாதிபதி மாளிகை!

350 கோடி ரூபா செலவில் யாழில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அன்று மக்களின் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு பாரிய மாளிகைகளை அமைத்தது பற்றி இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 350 கோடி ரூபா செலவில் யாழில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை இன்று வெறுமனே மூடப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

அதன் நன்மைகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அந்த மாளிகையை உயர்தரம் வாய்ந்த சுற்றுலா ஹோட்டலாக மாற்றுவதற்கு தற்போது சர்வதேச ரீதியாக விலைமனு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய நிதி மோசடிகள் இன்று வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் இலங்கை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு கடன் தொகை 10 டிரில்லியன்கள் ஆகும். நிதி அமைச்சின் புள்ளி விபரங்களின்படி அத்தொகையில் ஒரு டிரில்லியன் ருபாவே செலவிடப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏனைய நிதிக்கு என்ன நடந்தது என்பதற்கான எந்தவித ஆவணமும் கிடையாது என்றும் இது பற்றி நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்கின்றபோது மேல்தட்டு திருட்டுக் கூட்டணி ஒன்று உருவாகியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் அவர்களுடன் போராட வேண்டியிருப்பதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.