அசிங்கமான நாடுகளிலிருந்து ஏன் இங்கு வந்தார்கள் – ட்ரம்ப்

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை, கடுமையான வசைச்சொற்கள் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

Trump_2_05560_14540வெள்ளை மாளிகையில் அமைந்துள்ள ஓவல் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விமர்சினங்களை முன்வைத்துள்ளார்.

மிகவும் அசிங்கமான நாடுகளிலிருந்து இவர்கள் ஏன் வரவேண்டும், அசிங்கமான நாடுகளிலிருந்து குடியேறியவர்களை நாம் இங்கு ஏன் வைத்திருக்கின்றோம் என்ற வகையில் அவர் தனது விமர்சினங்களை முன்வைத்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் பலவற்றால் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த தகவலுக்கு இதுவரை மறுப்பு செய்தி எதனையும் வெள்ளை மாளிகை வெளியிடவில்லை.

இதேவேளை, ஹெய்ட்டி, எல் சல்வடோர் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்களை குறிப்பிட்டே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளதாக குறித்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஏனைய அரசியல்வாதிகள், பிற நாடுகளுக்காக போராட விரும்பும் நிலையில், ட்ரம்ப், அமெரிக்த் தேசியத்துக்காகவும் அமெரிக்க மக்களுக்காகவும் போராடுகிறார் என வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ராஜ் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், அமெரிக்காவின் வளர்ச்சிப் பாதைக்கு உறுதுணையாக இருப்பவர்களின் வருகையை ட்ரம்ப் வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்பின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிராக மேரிலேண்ட் மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எலிஜா கம்மிங்க்ஸ், கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ட்ரம்பின் இந்த வார்த்தை பிரயோகமானது, ஜனாதிபதி பதவியையே கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கறுப்பினத்தவரான, நாடாளுமன்ற உறுப்பினர் செட்ரிக் ரிச்மன்ட், டரம்பின் இனவாதத்தினை இந்த கருத்து வெளிகொண்டு வருகிறதாக தெரவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், எல் சல்வடோர் நாட்டைச் சேர்ந்த சுமார் 2 இலட்சம் பேருக்கான தற்காலிக குடியுரிமையை ட்ரம்ப் ரத்து செய்திருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்ப் அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை கீழ் நிலை மட்டத்தில் உள்ளவர்கள் என தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அசிங்கமான நாடுகளிலிருந்து  இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் - டொனால்ட் ட்ரம்ப்