கரீபியன் கடல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், கடலோர பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஹோண்டுராஸ் – கியூபா நாடுகளுக்கு இடையேயான நடுக்கடலில், கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்பொழுது, மிகவும் வலுவான இந்த பூகம்பம் ஆரம்பத்தில் 7.8 ரிக்டர் அளவாக பதிவாகியது. அதன் பின்னர் 7.6 ரிக்டராக அளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறும்பொழுது, ரிக்டர் அளவு 7.6 ஆக பதிவாகியுள்ளதால், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 1000 கி.மீ தொலைவுக்கு சுனாமி தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் சுனாமி அலைகள் குறைந்தது 1 மீட்டர் உயரத்திற்காவது எழும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மெக்ஸிகோ, கியூபா, ஜமைக்கா, பெலிஸ், ஹோண்டுராஸ் மற்றும் கேமன் தீவுகள் உட்பட, கரீபியன் கடல் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.இந்திய நேரப்படி அங்கு காலை 8.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அங்கு தற்போது இரவு நேரம் என்பதால் பொதுமக்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






