அண்மையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. எப்போதுமே அந்த கூட்டத்தில் ஸ்டாலினை வாழ்த்தி பேசும் கையோடு அமைதியாகிவிடுவார்கள் மாவட்ட செயலாளர்கள்.
ஆனால் அன்றோ அவர்கள் அனைவரும் தங்களது மனம் திறந்து பல்வேறு பிரச்சனைகளை ஸ்டாலின் முன்னிலையில் பகிர்ந்திருந்தார்கள்.
.jpg)
அப்போது அவர்கள் பேசுகையில், குறிப்பாக நீங்கள் எந்த மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட அணியினர் தான் உங்களை சுற்றி நிற்கின்றனர். எனவே நீங்கள், அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கும் உங்களை நெருங்கி நிற்கும் வாய்ப்பை கொடுங்கள். என்று சொல்லியிருந்தார்கள்.
மாவட்ட செயலாளர்களின் இத்தகைய குத்தல் பேச்சு மிக குறிப்பாக துரைமுருகனை நோக்கித்தான் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்க உரை கொடுத்தார்கள். அதோடுமட்டுமல்லாமல் பொன்முடி மற்றும் எ.வ.வேலு ஆகியோரும் துரைமுருகனுக்கு அடுத்த இடத்தில் மற்ற நிர்வாகிகளின் ஆதங்க டார்கெட்டில் இருக்கிறார்கள் என்று கோடிட்டுக் காட்டினார்கள்.
இந்த நிலையில் நேற்று அந்த விவகாரம் அப்பட்டமாகவே வெடித்துள்ளது. அதாவது நேற்று சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்க நெருங்கும் போது அவருக்கு முன்னதாகவே அந்த இடத்தை ஆக்கிரமித்து நின்றார் துரைமுருகன்.
பின்னர் அவரை ஒட்டி வந்து நின்ற ஸ்டாலின் அவரை சற்று தள்ளி நிற்க வைத்துவிட்டு தனது பேச்சை துவக்கினார். இந்த நிலையில் ஸ்டாலினிடம் ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டினார் துரை.
என்னவென்றால் வழக்கம் போலவே ஸ்டாலினின் இடது பக்கமாக ஒட்டிக் கொள்வதற்காக பொன்முடி வந்து நின்றார். அப்போது பார்த்து அந்த இடத்திற்கு ஜெ.அன்பழகன் வர முயன்றார்.

இதனால் பொன்முடி மற்றும் அன்பழகனுக்கு இடையில் வாக்குவாதம் வந்துவிட்டது. உடனே அன்பழகன் எகிற ஆரம்பிக்க, பொது இடத்தில், அதுவும் செய்தியாளர்களின் முன்னிலையில் தங்களது மானம் போகிறதே என்ற வருத்தத்தில் ஸ்டாலின் அவரை சமாதானம் படுத்த முயன்று அவரின் கையை பிடித்து அமுக்கினார்.
ஆனால் அவரோ கண்டுகொள்ளாமல் ஸ்டாலினின் கையை உதறிவிட்டு பொன்முடியுடன் சண்டை போடுவதிலேயே குறியாய் இருந்தார்.
அதனையடுத்து ஒருவழியாக வழக்கம் போல நீங்களே நில்லுங்க சார், நாங்க போறோம். என்றபடி அன்பழகன் வெறுப்பாய் கத்த, பொன்முடி பதிலுக்கு ஏதோ சொல்லி ஏன் கத்தறீங்க என்று கேட்டார்.
அதற்கு உடனே, ஜெ. அன்பழகனோ கத்தாதீங்கன்னா பிறகு வேறென்ன செய்யுறது? என்றபடி பொன்முடியை தள்ளிவிட்டு ஸ்டாலினோடு இணைந்து நின்றார்.
ஸ்டாலினை சுற்றி நிற்பவர்கள் யார்? என்பதில் இதுநாள் வரை இலைமறை காயாக இருந்த இந்த மோதல் நேற்று அனைவரின் முன்னிலையிலும் அப்பட்டமாக வெடித்துவிட்டது.






