தமிழக மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே கல்வீசி தாக்குதல்!

இந்திய எல்லையில் இலங்கை கடற்படையினர், கற்கள் மற்றும் கண்ணாடிப் போத்தல்களால், மீனவர்களை தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது கல்வீசி தாக்குதல்!

இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளால் அச்சம் அடைந்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள், நேற்று(06.01.2018) காலை, 900 க்கும் குறைவான படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று, சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும், இடையே மீன்பிடிக்க முயன்றபோது, 10 க்கும் மேற்பட்ட இலங்கை ரோந்துக்கப்பல்களில், ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், கண்ணாடிப் போத்தல்கள், கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளை மீனவர்கள் மீது வீசி எறிந்து, அச்சுறுத்தியுள்ளனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரவோடு இரவாக, கரை திரும்பியுள்ளனர்.

மேலும், மீன்பிடித்துவிட்டு இன்று(08.01.2018) அதிகாலை கரைதிரும்பிய 100 க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த, சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான மீன்பிடிச் சாதனங்களை சேதப்டுத்தி, கடலில் தூக்கி வீசியுள்ளனர். இதனால் படகு ஒன்றிற்கு சுமார் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா வரை, பெரும் நஷ்டத்தோடு கரை திரும்பினர்.

மேலும், நேற்று தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம், சாமி தரிசனம் செய்வதற்காக, இராமேஸ்வரம் வந்த போது மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து, மீனவர்கள் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார். அப்போது, வரும் காலங்களில் மீனவர்கள் மீது கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, மத்திய அரசின் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, படகுகளையும் மீனவர்களையும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கச்சத்தீவையும் மீட்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்த நிலையில், இன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம், மீனவக் கிராமங்களில் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது.