மகிந்தவை நிரந்தரமாக ஓரம்கட்டுமா மைத்திரியின் எதிர்பாராத பாய்ச்சல்?

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி! விசாரணையை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை! இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரியின் விசேட அறிக்கை! இவை மூன்றும் இன்றைய இலங்கை அரசியலில் யாரும் எதிர்ப்பார்த்திராத அதிரடி மாற்றங்களை கொண்டு வருவனவாய் அமைந்துவிட்டன.

maithripala-sirisena-and-mahinda-rajapaksa-640x400இதன் தாக்கம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஐ.தே.க இன் இன்னும் பல முக்கியஸ்த்தர்களிடத்தில் மாத்திரம் ஏற்பட்டுவிடவில்லை.

இந்த அறிக்கையின் தாக்கம், அன்னளவாக தசாப்த காலமாக இலங்கையை தனது சுய கட்டுப்பாட்டுக்குள், தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த ராஜபக்ச குடும்பத்தினரிடையேயும் செல்வாக்கு செலுத்தியுள்ளது.

நிரந்தரமாக அரசியலில் இருந்து ஓரம் கட்டப்படுவாரா மகிந்த என்ற நிலையையும் தோற்றுவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரியின் இந்த விசேட அறிக்கை, துணிச்சலான செயற்பாடு, முத்தசாப்த கால போரை வென்ற முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதாய் அமைந்து விடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மற்றுமொரு அறிக்கை ஜனாதிபதியிடத்தில் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது, கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தற்போதைய நிலையை இலகுவாய் கூறுவதென்றால் தாம் ஓரம் கட்டியவர்களாலேயே, தாம் அரசியலில் இருந்து ஓரம்கட்டப்படும் அபாயத்தையே தற்போது மகிந்த ராஜபக்சவும், ராஜபக்சர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து பாரியதொரு அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய நிலையிலேயே ஆட்சி மாற்றம் என்ற ஒன்று சாத்தியப்பட்டது.

அதன்பிறகு, ரணில் பிரதமராகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மைத்திரியின் ஆஸ்த்தான ஆலோசகராகவும் மாறிவிட்டதுடன் மைத்திரியின் இடத்தில் அசைக்கமுடியாத தனி இடத்தையும் சந்திரிக்கா பெற்றுக்கொண்டு விட்டார்.

கடந்தகால அரசியல் நிலையை நோக்கும்போது, முதன் முதலில் தான் பதவிக்கு வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து ஓரம்கட்டியது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவையே.

இது நாம் அல்ல, சர்வதேசமும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்து அறிவதற்கான முதல் சந்தர்ப்பமாக அமைந்தது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இடத்தில் இருந்து, மகிந்த ராஜபக்சவின் கைக்கு ஆட்சி மாறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கான பாதுகாப்புக்கள் குறைக்கப்பட்டன, சலுகைகள் குறைக்கப்பட்டன. அரசியலில் இருந்து முற்றுமுழுதாக நிர்க்கதியாக்கப்பட்ட ஒரு அவல நிலைக்கு சந்திரிக்கா தள்ளப்பட்டார்.

தொடர்ந்து, யுத்த வெற்றி, யுத்த வெற்றியின் வெளிப்பாடாய், அதே மமதையில் மீண்டும் ஒரு முறை பதவி என தசாப்த காலமாய் ஆட்சி செய்த ராஜபக்சர்களின் குடும்ப ஆட்சி, அவர் எதிர்ப்பாராத சந்தர்ப்பத்தில் மூவொரு சக்திகளாக ஒன்றிணைந்த மைத்திரி, ரணில், சந்திரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது, இலங்கை அரசியலை ஒரு தரம் ஆட்டம் காண வைத்தது.

ராஜபக்சர்களின் நிலையை ஒரு கணம் அதிர வைத்தத்தருணம் அது. அத்துடன் மைத்திரியின் சிறந்த ஆலோசகராக சந்திரிக்கா மீண்டும் அவதாரம் எடுத்த தருணமும் அது.

இந்நிலையில், தற்போதுள்ள ஆட்சியை குழப்புவதற்கு ஒருபோதும் மைத்திரியும் சரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் சரி வழிவகுக்க மாட்டார்கள்.

தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டெதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர எத்தனித்துள்ள நிலையில், அதனை தவிர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தையே மைத்திரியும், சந்திரிக்காவும் மேற்கொள்வர் என்பது தென்னிலங்கை அரசியல் அவதானிகளின் கருத்து.

நடக்கும் நல்லாட்சியில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்காமல், பிரதமர் தாமாக முன்வந்து பதவியைத் துறந்து, அந்த இடத்திற்கு தனது கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒருவரை நியமிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் ஒரு இணக்க அரசியலே நிலவும் என்பதில் ஐயமில்லை என்பதை வெளிப்படுத்துவதோடு, மகிந்தவின் அரசியல் பின்னடைவையும் சற்றே வெளிப்படுத்தி வருகின்றது.

நல்லாட்சியின் ஜனாதிபதி மாத்திரம் அல்ல, அதன் அமைச்சர்களும் தற்துணிவான அறிக்கைகள் பலவற்றை முன்வைத்து வருகின்ற நிலையில், நீதி அமைச்சர் தளதா அத்துகோரள அண்மையில் தெரிவித்த கருத்தை இத்தருணத்தில் நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

அதாவது முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பாரிய ஊழல் மோசடிகளை விசேட நீதிமன்றங்கள் அமைத்து அதன் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

நீதித்துறையின் சுயாதீனத்தை பேணும் வகையில், ட்ரயல் அட்பார் முறை அமைக்கப்பட்டு ராஜபக்சர்களின் ஊழல் வெளிப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பதவி துறப்பதற்கு, மகிந்த ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களும் காரணம் எனலாம்.

அதாவது, முன்னாள் ஜனாதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு விசேட நீதிமன்றங்கள் அமைத்து தீர்வுகாணுமாறு முன்னாள் நீதி அமைச்சருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் அதற்கு மறுத்திருந்தமையும், அதன் பின்னர் அவர் பதவி துறக்க நேரிட்டமையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான பின்புலங்களில், தனது ஆட்சியில் உள்ள பிரதமர் மீதே நடவடிக்கை எடுக்க துணிந்த மைத்திரி, ராஜபக்சர்களின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறுவாரா?

நீதி அமைச்சர் தெரிவித்தது போல விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு ராஜபக்சர்களின் தவறுகள் சுட்டிக்காட்டப்படுமா என்ற வினாக்கள் தொக்கி நிற்கின்றன.

இந்நிலையில்தான், கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை தயாரித்து ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது பாரிய ஊழல் மோசடிகளுடன் மகிந்த தொடர்புபட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பாரியளவு அரசாங்க சொத்துக்களை தாம் விரும்பியதனை போன்று பயன்படுத்தியுள்ளனர் என கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி பல சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையிலேயே, குறித்த விசாரணையின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி பின்னிற்காமல் செயற்படுவாராயின், நீதி அமைச்சர் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படுவாராயின், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மைத்திரியின் சிறந்த ஆலோசகராக செயற்படுவாராயின், மகிந்தவின் குடியுரிமை பறிக்கப்படுமா?

மகிந்தவின் குடியுரிமை பறிக்கப்பட்டால் அவர் நிரந்தரமாக அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விடுவார் என்பது தற்போதைய நிலை.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய செயற்பாடு என்னவாக இருக்கும். பிணை முறி மோசடி விடயத்தில் அதிரடியாக செயற்பட்டவர், மகிந்தவின் விடயத்திலும் அவ்வாறாக செயற்படும் நிலை தோன்றுமா?

மகிந்தவின் குடியுரிமை மைத்திரியால் பறிக்கப்படும் பட்சத்தில், அரசியலில் இருந்து மகிந்த மாத்திரம் அல்ல ராஜபக்சர்களின் குடும்பமும் அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்படுவர் என்பது சாத்தியம்.

எதிர்ப்பார்க்கலாம் மைத்திரியின் எதிர்ப்பாராத பாய்ச்சலால் மகிந்தவின் இருப்பு எவ்வாறு அமையப்போகின்றது என்று!