மீண்டும் மத்திய கிழக்கின் பூதாகரமான மிக நீண்ட வரலாற்றை உடைய இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தச் நெருப்பினை கொளுத்தி கொழுந்துவிட்டு எரியச் செய்தவர் வேறு யாருமல்ல, உலகின் மிகப் பலம் வாய்ந்த பதவியான அமெரிக்க ஜனாதிபதி பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.
வட கொரிய அதிபர் மின்னாமல் முழங்காமல் தமது அணுகுண்டு அபிலாஷைகளை ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்க வைத்து சாதித்துக் கொண்டிருக்கையில் டொனால்ட் ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை விடுத்திருக்கிறார்.
வடகொரிய ஜனாதிபதியோ அமெரிக்கா அழித்துவிடும் என வெருட்டல்களை விடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் கிழக்காசிய பிராந்தியத்தில் ஐந்து நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவியும் பலமும் சேர்க்கும் பேச்சுக்களில் ஈடுபட்டார்.
அத்துடன் அவரின் நிகழ்ச்சி நிரலில் நலிவடையும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்துவதற்கான அட்டவணையும் இருந்தது.
வட கொரியா நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதங்களை விண்ணில் ஏவி தனது செயல்களை உலகுக்கு காட்டிக் கொண்டு இருக்கிறது.
அமெரிக்க அதிபரோ இதுபற்றி பல விடயங்களையும் பேசிக்கொண்டு இருக்கிறார். உலக அரசியலில் பேசுவது என்பது யுத்தத்தில் ஈடுபடாமல் இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபடுவதைக் குறிக்கின்றது.
ஆனால் ட்ரம்பைப் பொறுத்தமட்டில் அவர் இராஜதந்திர முறையில் பேசவில்லை. பதவியேற்ற நாளில் இருந்து இடக்கு முடக்காக,ஒன்றுக்கொன்று முரணாக பேசி ட்ரம்பிசம் ((Trumpism) என்றால் வாய்க்கு வந்தபடி பேசுவது என்று உலக மக்களுக்கு தெளிவாக புரியும்படி பேசி வருகின்றார்.
ட்ரம்பிசம் ஒரு போதும் கொரிய தீபகற்பத்தில் வெற்றியை கொண்டுவரப்போவதில்லை.
((Trumpisim would not bring Triumphisum in Korea Peninsula) ஆனால் ட்ரம்பின் அண்மைய அறிவிப்பானது அதாவது கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலின் பிரிக்க முடியாத தலைநகரம் என்பது முழு உலகத்தையும் திடுக்கிட வைத்துள்ளது.
இப்பிரகடனம் ஒருவகையில் வேறு விதமான நெருப்பை கொளுத்தி சூட்டை உருவாக்கியுள்ளதாகத் தான் தெரிகின்றது.
ஒரு பிரபலமான ஆங்கிலப் பத்திரிகை ட்ரம்பை அனுமனாகச் சித்திரித்து வாயிலில் நெருப்பை கொளுத்தி உலகமெல்லாம் அனுமாராக பறந்து திரிவதாக காட்டியுள்ளது.
கார்ட்டூன் எனப்படும் கருத்துப்படம் (கேலிப்படம் அல்ல) ஒரு படத்தின் மூலம் வலிமையான நீண்ட பல கருத்துக்களை எடுத்தியம்பவல்லது.
இவ்வாரம் இஸ்லாம் கூட்டுறவு அமைப்பாண்மையின் (OIC) மகாநாடு துருக்கியில் நடைபெற்றது.
இவ்வமைப்பாண்மை 57 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கியது. இவ்வமைப்பு ட்ரம்பின் கூற்றை முற்றாக நிராகரித்துள்ளது.
அவரின் கூற்று செல்லுபடியாகாது என்றும் மத்திய கிழக்கு–பாலஸ்தீன விவகாரத்தில் பக்கம் சாராத முகவராக அமெரிக்க இனி செயற்பட முடியாது எனவும் கூறியுள்ளது.
பலஸ்தீன அதிகார சபைத்தலைவர் OIC மகாநாட்டில் பங்கு பற்றி ட்ரம்பின் அறிவிப்பு அழிபாதகச் செயல் எனவும் மாபெரும் குற்றமிழைத்து விட்டார் எனவும் உலக சமாதானத்தை பெரும் அச்சுறுத்தலாக்கியுள்ளார் எனவும் கூறினர்.
துருக்கிப் பிரதமர் ஏர்டோகான் ட்ரம்ப் எதிர்காலத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சமாதான தூதுவராக இயங்க முடியாது எனவும் கண்டித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின் இஸ்ரேல்–பலஸ்தீனப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு 1947இல் பிரிட்டிஷ் திட்டம் ஒன்றினை வகுத்தது.
அதன் பிரகாரம் பலஸ்தீன மக்கள் தொன்றுதொட்டு வாழ்ந்த பிரதேசங்களை மூன்று துண்டுகளாகப் பிரிப்பதே அத்திட்டம் ஆகும்.
யூதர்களின் அரசுக்கான பகுதி, அராபிய மக்களின் அரசுக்கான பகுதி, ஜெருசலேம் பகுதி ஆகியவையே அந்த மூன்று துண்டுகளுமாகும்.
மூன்றாவது துண்டான ஜெருசலேம் சர்வதேசத்தினால் நிர்வகிக்கப்படும் நகரமாக காணப்படும் எனத் திட்டம் வகுத்தது.
யூதத் தலைவர்கள் இத்திட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றனர். அராபிய உலகம் இத்திட்டத்தை அடியோடு நிராகரித்தது.
1948இல் பிரிட்டன் தனது காலனித்துவ ஆட்சி அதிகாரத்தை பலஸ்தீனத்திலிருந்து விலக்கியதும் யூத சியோனிட்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையே பாரிய யுத்தம் மூண்டது.
ஜெருசலேத்தின் மேற்குப் பகுதியை யூதர்கள் கைப்பற்றினர். பலஸ்தீனர்கள் கிழக்கு ஜெருசலேத்தைக் கைப்பற்றினர்.
1967ஆம் ஆண்டில் நிகழ்ந்த யுத்தத்தின் போது இஸ்ரேலியப் படையினர் கிழக்கு ஜெருசலேத்தையும் கைப்பற்றி தமது பகுதிகளுடன் இணைத்தனர்.
ஐ.நா .சபையோ, சர்வதேச சமூகமோ இஸ்ரேலின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டதில்லை.
கிழக்கு ஜெருசலேத்தில் வாழும் பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை இஸ்ரேலால் மறுக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள அல்–ஹக்சா பள்ளிவாசல் வரலாற்றுப் புகழ் வாய்ந்ததாகும். இஸ்லாமிய மக்களின் கலாசாரத்துடன் இணைந்த பாரம்பரியப் பெருமையும் கொண்டதாகும்.
பொற்கோவில் இந்திய பஞ்சாபியர்களுக்கு எவ்வாறு பெருமைக்குரியதோ அவ்வாறே அல் ஹக்சா பள்ளிவாசலும் பலஸ்தீனயர்களுக்கும் அராபியர்களுக்கும் பெருமைக்குரிய தலமாகும்.
சீக்கியர்களின் பொற்கோவிலின் மேல் முன்னாள் இந்தியப் பிரதமர் கைவைத்ததன் விளைவு எவ்வாறு அமைந்தது என்பது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
அரபு– இஸ்ரேல் பிரச்சினையில் 2000இல் இடம்பெற்ற காம் டேவிட் உச்சிமகாநாடு முக்கியமானது.
அப்போதைய இஸ்ரேல் பிரதமர் பராக் பலஸ்தீன எல்லைகள், தரைப்பிரதேசம்,ஜெருசலேம் ஆகிய விடயங்களில் ஓரளவு இணக்கம் காண்பித்தார்.
பலஸ்தீனிய பிரதிநிதிகள் பலஸ்தீனயர்கள் உள்ள பிரதேசங்களிலும் கிழக்கு ஜெருசலேத்திலும் பூரண இறைமையைக் கோரினார்.
பின்னர் எகிப்து தபா நகரில் 2001 இல் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் – பலஸ்தீனர்களின் ஆகக்குறைந்த கோரிக்கைகளை ஏற்பது போல இஸ்ரேல் தரப்பினர் போக்குக் காட்டிக்கொண்டார்கள்.
இருப்பினும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதிகளான ஜோர்ஜ், பராக் ஒபாமா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றது எனினும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவில் தீர்வுகள் எட்டப்படவில்லை.
இன்றைய சர்வதேச சமன்பாடுகளில் சீனாவின் வகிபாகம் பிரதானமானது. சீன ஜனாதிபதி ட்ரம்பின் கிழக்கு ஜெருசலேம் யோசனையை நிராகரித்துள்ளார்.
ஐ.நா. சபையின் 1967ஆம் ஆண்டு தீர்மானத்தின் படி 1967இல் அமையப் பெற்ற எல்லைகளின் பிரகாரம் கிழக்கு ஜெருசலேத்தை தலைநகராகக் கெண்ட சுதந்திர பலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்–பலஸ்தீன பிரதிநிதிகளுக்கிடையே தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் என சீனா வலியுறுதியுள்ளது.
சீனாவின் உயர் தொழில்நுட்பக்குழு இஸ்ரேலுக்கு விஜயமொன்றைச் செய்யவிருந்தது. ட்ரம்பின் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அந்த விஜயத்தை சீனா இரத்துச் செய்துள்ளது.
இதன்மூலம் சீனா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை 2018ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் சீனா அரபுப் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயங்களில் கரிசனை கொண்டுள்ளதாகவும் கிழக்கு ஜெருசலேம் பிரச்சினையின் தாக்கத்தினால் சீனா, இஸ்ரேலில் மேற்கொள்ளவிருந்த முதலீட்டுத் திட்டங்கள் பாதிப்படையலாம் என்பதே அந்த எச்சரிக்கையாகும்.
சீனா தற்போது சூழலை மாசுபடுத்தும் உயர் கைத்தொழில் நடைமுறையில் உள்ளது. அதனை மாற்றி சூழலுக்கு இசைவான புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கைத்தொழில் மயமாக்கலுக்கு இஸ்ரேல் சீனாவுக்கு உதவி வந்தது.
இஸ்ரேலின் உதவி சீனாவுக்கு தேவைப்படுகிறது. இஸ்ரேலானது தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆவணி மாதம் மத்திய கிழக்கு தகராறினை தணிப்பதற்கு நான்கு அம்சத் திட்டத்தை சீனா முன்வைத்தது.
இஸ்ரேல் பலஸ்தீன அதிகார சபையை தனது பெருந்திட்டமான கடல், தரைவழி பட்டுப்பாதைத் திட்டத்தில் (ஒரு பட்டை ஒரு தெரு) இணையுமாறு உற்சாகப்படுத்தியது.
பெரு நிதியை இந்நாடுகளுக்கு வழங்க விருப்பம் தெரிவித்தது. துறைமுகம், புகையிரத பாதை, பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்யவும் ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பாவுடன் வர்த்தகத்தை விருத்தி செய்ய முன்வந்துள்ளது.
மேலும் ஐ.நா.வின் பாதுகாப்புச்சபை (UNSC – United Nations Security Council) ) நவம்பர் 1967இல் 242ஆம் இலக்க தீர்மானம் ஒன்றை வெளியிட்டது.
இதன்படி 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பலஸ்தீன- இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட இடங்களிலிருந்து இஸ்ரேல் வாபஸ் பெறவேண்டும் என்பதாகும்.
1968 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட தீர்மானத்தின் படி ஜெருசலேம் பிரதேசத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு நிகழ்ந்துள்ளது என்பதாகும்.
மேலும் பலஸ்தீன- – இஸ்ரேல் பிரச்சினைகள் பற்றி காலத்திற்குக் காலம் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.தீர்மானங்கள் இஸ்ரேலினால் உதாசீனம் செய்யப்பட்டன.
இந்த சூழ்நிலைகளில் அணிசேரா இயக்கம் எவ்வாறு ட்ரம்பின் ஜெருசலேம் யோசனையை கையாளப் போகிறது என்பது தொடர்ச்சியாக அணிசேரா இயக்கத்தின் ஏகாதிபத்திய விரோத, பாலஸ்தீன மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு குரலாக விளங்கிய வரலாற்றை ஆதரித்தவர்களின் அங்கலாய்ப்பு ஆகும்.
1967ஆம் ஆண்டு இஸ்ரேல் கைப்பற்றிய பல தேசங்களும் அதனைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு, பொதுச்சபையின் தீர்மானங்களும் எவ்வாறு இஸ்ரேலினால் உதாசீனம் செய்யப்பட்டதென்பதையின் சர்வதேச சமூகம் தெளிவாக புரிந்துகொண்டிருக்கையில் ட்ரம்ப் போட்ட குண்டு பேரதிர்வலைகளைத் தோற்றுவிக்கப் போகிறது.
2000 களில் இடம்பெற்ற பாலஸ்தீன மக்களின் இன்ரிபாடா என்ற மக்கள் போராட்டம் மீண்டும் வெடிப்பதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் உரத்தைப் போட்டுள்ளார்.
பலமான இஸ்ரேலிய படைகளுடன் வெறும் கைகளுடனும் கற்களின் துணையோடும் போரிட்டார்கள் என்பது தான் இன்ரிபாடாவின் சிறப்பம்சமாகும். இன்ரிபாடா என்பது அராபிய மொழியில் மக்கள் எழுச்சியைக் குறித்து நிற்கிறது.
இன்ரிபாடா மட்டுமல்ல, அமெரிக்காவாலும் மேற்குலகத்தாலும் உரத்துப் பேசப்படும் இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தமது கைவரிசையைக் காட்டும் என்பதும் ஆழ்ந்த அரசியல் ஞானிகளின் கருத்தாகும்.
நீண்ட காலமாக பல சமாதான மேசைகளிலும் சர்வதேச மாநாடுகளின் தளங்களிலும் ஓங்கி ஒலித்த பலஸ்தீன மக்களின் வாழ்வுப் பிரச்சினை இறுதியாக இரண்டு தேசங்கள் எனும் தீர்வினை நோக்கி நகர்ந்து பலஸ்தீன அதிகாரசபை தோற்றுவிக்கப்பட்டு எஞ்சிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய நேரத்தில் அதிபர் ட்ரம்பின் குண்டு சகல முன்னேற்றங்களையும் பின்தள்ளி வேறு ஒரு திசைக்கு பலஸ்தீனப் பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளது.நிரந்தரமான தீர்வு ஏற்படுவதற்கு சிக்கலாக காணப்படும் விடயங்கள்.
1. இரு நாட்டு தீர்வு தொடர்பாக எல்லைகளையும் பிரதேசங்களையும் நிர்ணயித்தல்
2. மேற்கு கரையில் அமைந்துள்ள இஸ்ரேலிய குடியிருப்புகள் தொடர்பாக பலஸ்தீனர்கள் மனப்பாங்கு
3. ஜெருசலம் நகரின் நிலை
4. பயங்கரவாதம், வன்முறை தூண்டல் ஆகியவை ஏற்படக்கூடாதென இஸ்ரேலின் அக்கறை
5. வெளிநாட்டு பலஸ்தீன அகதிகள் மீண்டும் பலஸ்தீனத்திற்கு திரும்புதல்.
சர்வதேச அரங்கில் ட்ரம்பின் அந்தஸ்து பல கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலஸ்தீன மக்களுக்கு அமெரிக்கா மீண்டும் அநீதி செய்துள்ளது.
இந்த சூழ்நிலைகளில் இலங்கை எவ்வாறு ட்ரம்பின் ஜெருசலேம் யோசனையை எவ்வாறு கையாளப் போகிறது என்பது பலராலும் கேட்கப்படும் கேள்வியாகும்.
ஆரம்பத்திலிருந்தே பலஸ்தீனர்களுக்கு ஆதரவு காட்டும் இலங்கை ஜெருசலேம் கையாளப் போகிறது என்பது மட்டுமல்ல, அண்மையில் கொழும்பில் பலஸ்தீன தூதரகத்துக்கு நன்கொடையாக காணி அளித்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் நெருங்கிய உறவினை பேணும் இலங்கை பலஸ்தீன மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு காட்டவேண்டும் என்பதே நியாயமாகச் சிந்திப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்.