திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் உள்ள காமக்கூர் கிராமத்தில், துணை காவல் கண்காணிப்பாளர் நெல் வயலில் டிராக்டரை ஓட்ட உத்தரவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இதுதொடர்பாக இன்று சேதப்படுத்தப்பட்ட நெல் வயலைப் பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, வழக்கு நிலுவையில் இருக்கும்போது டி.எஸ்.பி ஜெரீனா பேகம் எடுத்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கு எதிரானது.
இது முற்றிலும் கண்டிக்கத்தக்கச் செயல். உறவினர்களுக்குள் இருக்கும் பிரச்னைக்காக நெல் வயலை உழுதது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து டி.எஸ்.பி ஜெரீனா பேகம்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நெல்வயல் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக டிராக்டரை ஓட்டிய சதாசிவம் மற்றும் நில உரிமை கோரும் சாமுண்டீஸ்வரி ஆகியோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இருவர் தலைமறைவாகியுள்ளனர். முன்னரே டி.எஸ்.பி ஜெரீனா பேகம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவை அனைத்தும் அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் வந்த அவப்பெயர் தான் என்று ஒரு தரப்பு மக்கள் கூறுகின்றனர்.
ஆரணியில் நாற்பது ஆண்டு காலமாக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்றி மக்களுக்கு அகலமான பாதையை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
இதுவரை வந்த அதிகாரிகள் எல்லாம் அகற்றுவது போல அகற்றி விட்டு சென்று விடுவார்கள். அதன் பின்னர் மீண்டும் அந்த சாலை வழியே செல்லாத படி ஆக்கிரமிப்புகள் வந்து விடும். அதனை தனி ஆளாக நின்று நாற்பது ஆண்டு காலத்தில் நடக்காத ஒரு சம்பவத்தை நிகழ்த்தி காட்டினார் டி.எஸ்.பி ஜெரீனா பேகம்.
அதனை போன்றே தான் இந்த சம்பவத்திலும் செயல்பட்டு இருக்கிறார். நிச்சயம் மனு தாரர் தரப்பில் தவறு கண்டிப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சில இடங்களில் நல்லதுக்கு காலம் இல்லை என்பார்கள். அதை போன்றே இவரது அதிரடி நடவடிக்கைகளால் வேறு பகுதிக்கு மாற்ற குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.