உலகின் மிகப்பெரிய விமானம் இலங்கையில்!!

5a4097d23a0d9-IBCTAMILகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை உலகின் மிகப்பெரும் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. A-380 Airbus என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்பான இந்த விமானம் எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகும். இது நியூஸிலாந்தின் ஒக்லண்ட் நகரிலிருந்து டுபாய் நோக்கிச் சென்றுள்ளது. இதன்போது நடுவானில் விமானத்தின் எரிபொருள் பற்றாக்குறை உணரப்பட்டது. இதனால் இலங்கையில் தரையிறக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு கட்டு நாயக்க விமான நிலையத்துடன் தொடர்பு ஏற்படுத்தி அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் இன்று அதிகாலை மூன்று மணியை நெருங்கிய நேரத்தில் கட்டுநாயக்க ஓடு வழியில் தரையிறக்கப்பட்டு விமானத்திற்கான ஜெட் A-1 ரக விசேட எரிபொருள் நிரப்பப்பட்டது. பின்னர் அதிகாலை 4:30 அளவில் குறித்த விமானம் மீண்டும் டுபாய் நோக்கிப் பறந்து சென்றுள்ளது.

இந்த விமானத்தில் 400 பயணிகளும் 30 விமான ஊழியர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இதே ரக விமானம் கட்டு நாயக்கவில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.