இலங்கைக்கு கடும் ஆபத்து!

t_2_04446இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன் மூலம் அமெரிக்காவின் அதிருப்திக்கு இலங்கை உள்ளாகியுள்ளதுடன், இதுவரை காலமும் அந்த நாட்டிடம் இருந்து பெற்றுவந்த நேரடி மறைமுக நிதிகளை இழக்கும் அபாய நிலையும் தோன்றியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் உள்ளக மற்றும் இராஜதந்திர மட்டத்தில் அரசு பேச்சுகளை ஆரம்பித்துள்ளது என அயலுறவுத்துறை அமைச்சு வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்தத் தீர்மானம் மீது நேற்று முன்தினம் இரவு ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

128 நாடுகள் ஆதரவாகவும், 9 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை. இலங்கை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது.

இந்த விடயம் அமெரிக்காவைக் கடும் அதிருப்திக்கு உட்படுத்தியுள்ளது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வரும் நேரடி, மறைமுக நிதிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே மிரட்டியிருந்தார்.

இதுபோன்ற வில்லங்கமான தனது அறிவிப்புக்களைச் செயற்படுத்துவதில் அவர் பெயர் போனவர் என்பதால், இலங்கைக்கும் ஆபத்து இருப்பதாகவே கருதப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கியுள்ளதால் முஸ்லிம் வாக்குகளைக் கருத்தில் கொண்டு ஜெருசலேம் விவகாரத்தில் இலங்கை அரசு நடுநிலை வகிக்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நாடுகள் தொடர்பில் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதால் அடுத்து வரும் சில நாட்களில் ட்ரம்பின் அதிரடியான சில முடிவுகள் வெளிவருமென வெள்ளை மாளிகையை மேற்கோள்காட்டி பன்னாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து உள்ளக மற்றும் இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசு தீவிர பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அமெரிக்காவால் இலங்கைக்கு 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருடாந்தம் நேரடி மற்றும் மறைமுக நன்கொடையாகக் கிடைத்து வருகின்றது. இந்த நிதிக்கு ஆபத்து வரக்கூடும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.