மெக்ஸிக்கோவின் பிரபல சுற்றுலாத் ஸ்தலமான லொஸ் காபொஸிற்கு அருகிலுள்ள 3 பாலங்களில் 6 சடலங்கள் தூக்கிலிட்டு தொங்கவிடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை காணப்பட்டமை பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லொஸ் காபொஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள லாஸ் வெரெடாஸ் பாலத்தில் இரு சடலங்களும் கபோ சான் லூகாஸ் மற்றும் சான் ஜோஸ் டெல் கபோ பிராந்தியங்களுக்கிடையிலமைந்த நெடுஞ்சாலையிலுள்ள பிறிதொரு பாலத்தில் இரு சடலங்களும் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மூன்றாவது பாலத்தில் மேலும் இரு சடலங்களும் தொங்கிய நிலையில் காணப்பட்டன. இறந்தவர்கள் அனைவரும் ஆண்களாவர்.
அந்த சடலங்களுக்கு அருகில் போதைவஸ்துக் குழுக்களின் அடையாளச் சின்னங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி படுகொலைகள் குஸ்மனெஸ் அன்ட் தெகோரிபெனொஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த சடலங்களுக்கு அருகிலிருந்த துண்டுக் குறிப்பில் தம்முடன் இணக்கமாகச் செயற்படாதவர்களுக்கு இதுவே நடக்கும் என்ற எச்சரிக்கை வாசகம் காணப்பட்டுள்ளது.