வடகொரியாவுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பான விவகாரங்களில் ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பின் அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

முன்நிபந்தனையற்ற முறையில், வடகொரியாவுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் றெக்ஸ் டில்லர்சன் கடந்த புதன்கிழமை கூறியிருந்தார்.
இந்த நிலையில் வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுக்களை ஆரம்பிக்காது என வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியொருவர், அமெரிக்க நேரப்படி நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் சமீபகால ஏவுகணைச் சோதனைகள் ஆபத்தானவை எனவும், இதனால் வடகொரியாவுடன் பேசுவதற்கு இது சரியான தருணம் அல்ல என்றும் வெள்ளை மாளிகையின் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
வடகொரியாவுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கும் விவகாரம் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் றெக்ஸ் டில்லர்சன் கூறியமைக்கும் உங்கள் கருத்துக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றதே என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அந்த உயர் அதிகரி, மேலதிகமாக ஏவுணைச் சோதனைகளை நிறுத்தினால் மாத்திரமே வடகொரியாவுடன் பேச முடியும் என டில்லர்சன் கூறியதாக சுட்டிக்காட்டினார். அதேவேளை பேச்சுக்குத்தயார் என றெக்ஸ் டில்லர்சன் கூறியமைக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி வழங்கினாரா என கேட்கப்பட்ட மற்றுமொரு கேள்விக்கு அந்த உயர் அதிகாரி பதிலளிக்கவில்லை.
ஆனால், வடகொரியா அணு ஆயுத பரிசோதனை செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.
இரு தரப்புக்கும் இடையே பேச்சுக்கள் நடைபெறும்போது, மற்றுமொரு ஆணு ஆயுத பரிசோதனையை வடகொரியா நடத்தினால், அது பேச்சுக்கு ஆரோக்கியமாக அமையாது என்றே றெக்ஸ் டில்லர்ஸன் கூறியதாகவும் வெள்ளை மாளிகையின் அந்த உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் மேலும் விளக்கமளித்தார்.
அதேவேளை வடகொரியாவுடன் பேசுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக றெக்ஸ் டில்லர்சன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரும் கூறியிருந்தார். ஆனால் பேசி நேரத்தை வீணடிக்க முடியாது என ஜனாதிபதி டொனாலட் ட்ரம் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






