‘சிறந்த நபர்’ விருது பெற்ற இந்தோனேசிய செல்பி குரங்கு

'சிறந்த நபர்' விருது பெற்ற இந்தோனேசிய செல்பி குரங்கு

ஜகர்தா:

கடந்த 2011 ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுலாவேசி என்ற தீவில் பிரிட்டன் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டர் குரங்குகளை புகைப்படம் எடுக்க சென்றார். காட்டில் அவர் பொருத்தி வைத்திருந்த கேமராவில் உள்ள பட்டனை அங்கிருந்த ‘நருடோ’ என பெயரிடப்பட்ட ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ இன குரங்கு ஒன்று அழுத்தியது. உடனே அந்த குரங்கின் புகைப்படம் பதிவானது. இது குரங்கு எடுத்த செல்பி என இணையதளங்களில் வைரலாக பரவியது.

இதற்கிடையே பீட்டா அமைப்பானது இந்த புகைப்படத்தின் காப்புரிமையை செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது. குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு, மனிதர் அல்லாத உயிரினத்தை, உரிமையாளராக அறிவிக்கக் கோரிய அந்த வழக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இறுதியில், அந்த புகைப்படம் மூலம் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதத்தை ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ குரங்கினத்தை பாதுகாக்க நன்கொடையாக அளிப்பதாக டேவிட் ஸ்லேட்டர் ஒப்புக் கொண்டார். இதனால், அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், குரங்கு எடுத்த செல்பி இந்த ஆண்டின் சிறந்த நபர் என்ற விருதை பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பை பீட்டா எனப்படும் விலங்குகள் உரிமை குழுமம் வெளியிட்டுள்ளது. குரங்கானது உயிருள்ள ஒரு விலங்காகும். அதனை மதித்து விருது வழங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என பீட்டா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். குரங்கிற்கு இந்த விருது கிடைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.