ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தொடர்ந்து நான்காவது நாளாக தினகரனுக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதிமுக, இரட்டை இலை சின்னம் ஆகியவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இருக்கும் அணிக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது தலைமை தேர்தல் ஆணையம்.
இதனைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அவைத்தலைவர் மதுசூதனனை எதிர்த்து தினகரன் சுயச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார். இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்திடம் தினகரன் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் வரும் 21ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் நடைபெறவுள்ள சூழ்நிலையில் களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இதனிடையே தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தினகரனுக்கு நான்காவது நாளாக இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.