நேரு புணரமைக்க ஆதரவு தெரிவிக்காத சோமநாதர் கோயிலுக்கு அவரது பேரன் சென்றது ஏன்?

நேரு

நவம்பர் 29ஆம் தேதி மதியம் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் புகழ்பெற்ற ஆலயமான சோமநாதர் ஆலயத்திற்கு சென்றதை அடுத்து பலவிதமான சர்ச்சைகள் வெடித்துள்ளன.

சோமநாதர் ஆலயத்திற்கு இந்துக்கள் அல்லாதவர்கள் செல்லும்போது, அங்கு வைக்கப்பட்டுள்ள ‘பிற மதத்தினருக்கான பதிவேட்டில்’ பெயர் எழுதவேண்டும் என்பது அங்குள்ள நடைமுறை.

ராகுல் காந்தியுடன் சோமநாதர் ஆலயத்திற்கு சென்ற காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஹமது படேலின் பெயருடன் சேர்த்து ராகுல் காந்தியின் பெயரும் அந்த பதிவேட்டில் எழுதப்பட்டது சர்ச்சையை கிளப்பிவிட்டது.

ஆனால் சர்ச்சைக்கு இதுமட்டுமே காரணமில்லை. பிரதமர் நரேந்திர மோதி தனது டிவிட்டர் பதிவில், “சர்தார் படேலின் முயற்சிகள் இல்லையெனில், சோம்நாத்தில் ஆலயம் கட்டுவது சாத்தியமாகியிருக்காது” என்று எழுதியிருந்தார். இது உண்மையா?

ராகுலை தாக்கிய மோதி

ராகுல் காந்தி

“இன்று சிலர் சோம்நாத்தை நினைவுகூர்கிறார்கள். வரலாற்றை மறந்துவிட்டார்களா என்று அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். உங்கள் குடும்பத்தின் உறுப்பினரான நாட்டின் முதல் பிரதமர் இங்கே ஆலயம் கட்டுவதற்கு ஆதரவளிக்கவில்லை.”

”டாக்டர் ராஜேந்திர பிரசாத் சோமநாதர் ஆலயத்தின் திறப்புவிழாவுக்கு வரவிருந்தபோது, அதற்கு ஜவஹர்லால் நேரு அதிருப்தி தெரிவித்தார்.”

”சர்தார் படேல் நர்மதா பற்றி கனவு கண்டார், உங்கள் குடும்பம் அந்தக் கனவை நனவாக்கவில்லை.”

நேருவுக்கு என்ன சம்பந்தம்?

மோதி
मोदी

குஜராத்தில் தேர்தல் நடைபெறுவதுதான் நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளின் கூச்சலுக்கும் காரணம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ராகுல் சோமநாதர் ஆலயத்திற்கு சென்றதை நேருவுடன் தொடர்புபடுத்தி பிரதமர் ஏன் விமர்சிக்கிறார்? இதில் உண்மை இருக்கிறதா?

இந்த கேள்விக்கான பதிலுக்கு நாடு விடுதலை அடைந்த காலகட்டத்தை ஆராயவேண்டும்.

நாடு சுதந்திரம் பெறும் சமயத்தில் ஜுனாகட் ராஜ்ஜியத்தின் நவாப் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார்.

சோம்நாதர்ஆலய புரமைப்புக்கு பற்றி காந்தி என்ன சொன்னார்?

நேருவும் காந்தியும்

ஜுனாகட் நவாபின் முடிவை இந்தியா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. 1947 நவம்பர் 12ஆம் தேதியன்று, நாட்டின் துணைப் பிரதமர் சர்தார் படேல் ஜுனாகட் சென்றார்.

அவர் இந்திய ராணுவத்தை அங்கு நிலைநிறுத்தவும், பிரசித்தி பெற்ற சோமநாதர் ஆலயத்தை புணரமைக்கவும் ஆணையிட்டார்.

சர்தார் படேல், கே.எம்.முன்ஷி மற்றும் காங்கிரஸின் பிற தலைவர்கள் சோமநாதர் ஆலயத்தை மறுநிர்மாணம் செய்யும் முன்மொழிவு திட்டத்துடன் மஹாத்மா காந்தியிடம் சென்றார்கள்.

இந்த திட்டத்தை வரவேற்ற காந்தி, ஒரு யோசனையையும் சொன்னார்.

ஆலய புணரமைப்புக்கான செலவு பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக வசூலிக்கப்படவேண்டும், அரசின் கஜானாவில் இருந்து செலவு செய்யவேண்டாம் என்று காந்தி தெரிவித்தார்.

காந்தி, படேலுக்கு பிறகு என்ன ஆனது ஆலயப் பணி?

ஜவஹர்லால் நேருவும், டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும்

ஆனால், அதற்குபின் சில தினங்களிலேயே காந்தி படுகொலை செய்யப்பட்டார், படேலும் அதிக ஆண்டுகள் வாழவில்லை. எனவே ஆலய புணரமைப்பு பணி, உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் கேம்.எம் முன்ஷியின் பொறுப்பாகிவிட்டது.

1950ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பழைய சோமநாதர் ஆலயத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்டது. ஆலயம் இருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த மசூதி சில மைல்கள் தொலைவில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.

சோமநாதர் ஆலயத்தை புணர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரக்கோரிய கேம்.எம் முன்ஷியின் அழைப்பை ஏற்று இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராசேந்திர பிரசாத் அங்கு சென்றார்.

1951 ஆண்டு மே மாதம் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமை வகித்த குடியரசுத் தலைவர் “சோமநாதர் ஆலயம் தொடர்ந்து பலமுறை சிதைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் பேரழிவின் சக்தியைவிட புணரமைப்பின் சக்தி அதிகம் என்பதற்கு அடையாளமாக இந்த ஆலயம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை நேரு தடுத்தது ஏன்?

நேரு

இந்த இடத்தில்தான் சோமநாத் ஆலயத்தின் கதையில் நேரு வருகிறார். உண்மையில், ராஜேந்திர பிரசாத்தை அங்கே செல்லவேண்டாம் என்று நேரு அறிவுறுத்தியிருந்தார்.

மதச்சார்பற்ற நாடான இந்தியாவின் குடியரசுத்தலைவர் மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வது உசிதமானதல்ல என்று நேரு கருதினார். இருந்தபோதிலும், ராஜேந்திர பிரசாத் நேருவின் அறிவுறுத்தலை ஏற்கவில்லை.

சோமநாதர் ஆலயத்தின் மறுசீரமைப்பு பணிகளில் நேரு ஈடுபாடு காட்டவில்லை. அதோடு, ஆலய கட்டுமானப் பணிகளுக்கு அரசு நிதி பயன்படுத்தப்படக்கூடாது என்றும் செளராஷ்டிரா மாநில முதலமைச்சருக்கு கடிதமும் எழுதினார் பிரதமர் நேரு.

70 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம் தற்போதைய அரசியல் அரங்கில் பேசுபொருளாக காரணம், குஜராத்தில் பிரச்சாரம் செய்கிற ராகுல் காந்தி சோமநாதர் ஆலயத்திற்கு சென்றதே.

சோமநாதர் ஆலயப் புணரமைப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவரின் பேரன் அதே ஆலயத்திற்கு வருவதை பாரதிய ஜனதா கட்சியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பது ஒருபுறம்.

மறுபுறமோ, அதே ஆலயத்திற்கு சென்ற ராகுல் காந்தியின் பெயர், பிற மதத்தினருக்கான பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இப்படி குஜராத் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.