சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டமொன்று இன்று(30) மட்டக்களப்பு கிரான் சந்தியிலும். சித்தாண்டிச் வாராந்த சந்தைக்கு முன்னாலும் நடைபெற்றது.
தெற்காசிய பெண்கள் தினத்தையொட்டி மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மூவின சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.
வன்முறைகளற்ற வீடு, சமூகம் மற்றும் நாடு எமக்கு வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை, நீதி, சமாதனம் எமக்கு வேண்டும், இனங்கள் இணைந்து இன்பமாய் வாழும் சமூகம் எமக்கு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் கொண்ட பதாதைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிராக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகளைக் கண்டிக்கிறோம் என்றும் சமகாலத்தில் சில முக்கிய வன்முறையாளர்களுக்கெதிராக சட்ட நீதி கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் எனினும் அனைத்து வன்முறைகளுக்கும் சட்ட நீதி கிடைக்கவேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோன்று காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை கண்டறியப்பட்டு நீதி வழங்கப்படவேண்டும் எனக்கோரி போராடிவரும் சகோதர உறவுகளுடன் நாம் இணைகின்றோம் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மேலும் நாடளாவிய ரீதியில் சமகாலத்தில் இனங்களுக்கிடையே ஏற்பட்டுவரும் வன்முறைகளைக் கண்டிப்பதாகவும் வன்முறைகளில் ஈடுபடுவோர் சட்டத்தின்மூலம் தண்டிக்கப்படவேண்டுமெனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் மௌனத்தைக்கலைத்து வன்முறைகளற்ற மகிழ்ச்சியான வாழ்விற்காக நீதியை நோக்கிய பயணத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.







