மகன்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை! ஒரே கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை!

மகன்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு முகப்பேரை அடுத்த பாடிபுதுநகரில் வசித்த குப்புசாமி – கோதை என்ற வயதான தம்பதியர் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

scuide67 வயதான குப்புசாமி, செக்யூரிட்டியாக பணியாற்றி, அந்த பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், அவரது மனைவி கோதைக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காலில் முறிவு ஏற்பட்டு, நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தானும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மனைவியின் உடல்நிலையால் வேதனையில் இருந்த குப்புசாமி, மகன்களுக்கு தொந்தரவு தரக் கூடாது என்பதால், மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, தாங்கள் குடியிருந்த வீட்டில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து, அவர்களது உடல்களைக் கைப்பற்றிய போலீசார், குப்புசாமி எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

அதில், திருமணம் முடிந்த மகன்கள் ஈட்டும் வருமானம் அவர்களது குழந்தைகளுக்கு கல்விச் செலவுக்கே போதாத நிலையில், அவர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என தனியாக வசித்ததாகவும், தற்போது தாங்கள் இருவருக்கும் உடல்நிலை மோசமாகிவிட்டதால் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் குப்புசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டுள்ள குப்புசாமி, வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு கொடுத்துள்ள அட்வான்ஸ் தொகையையும், தான் செக்யூரிட்டியாக பணிபுரிந்த இடத்தில் தர வேண்டிய சம்பளத்தையும் தங்களது மகன்களிடம் வழங்குமாறு உருக்கமுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.