காலத்தின் எடிட்டிங்கில் மாறிப்போன காட்சிகள்! மோகன்லால் பட எடிட்டர் இன்று ஆட்டோ ஓட்டுநர்

 எடிட்டர்

வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை. வாழ்க்கை எப்போது வேண்டுமானலும் தகிடுதத்தம் போட்டு தலைகீழாக மாறிப்போகலாம் என்பதற்கு உதாரணம் ஆகியிருக்கிறது நாராயணன் என்ற சினிமா எடிட்டரின் வாழ்க்கை. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படத்தில் அசோசியேட் எடிட்டராகப் பணியாற்றிய நாராயணன் இன்று ஒரு ஆட்டோ ஓட்டுநர். அதைத்தாண்டி பெரிய அடையாளம் அவருக்கு இல்லை. கேரளாவில் கண்ணூர் மாவட்டம் பொன்னம்பாறா பகுதியில் ஆட்டோ ஓட்டுகிறார் நாராயணன். சினிமாவுக்கு கத்தரி போட்ட கைகளை ஆட்டோவுக்கு ஆயில் போடும் இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறது வாழ்க்கை!

பத்தாம் வகுப்பு முடித்த கையோடு சினிமா மீதான காதலால் சென்னைக்கு வண்டி ஏறியவர் நாராயணன். அவருடைய மூத்த அண்ணன் மோகன் அப்போது சினிமாவில் இருந்தார். அவருடைய பழக்கத்தால் விஜய வாஹிணி ஸ்டூடியோவில் நாராயணனுக்கு எடிட்டரின் உதவியாளர் பணி கிடைத்தது. அது டிஜிட்டல் கேமராக்கள் வராத காலம். கையால்தான் பிலிமை கட் செய்து படங்களை எடிட் செய்ய வேண்டும். விஜயவாஹிணி ஸ்டூ டியோவில் தொழில் கற்றார் நாராயணன். அதன்பின்னர் படங்களில் பணியாற்றத் தொடங்கினார்.
மலையாள சினிமாவின் முக்கிய இயக்குநர்களான பரதன், பிரியதர்ஷன் ஆகியோரின் படங்களில் அசோசியேட் எடிட்டராக இவர் பணியாற்றினார். பரதனின் ‘மின்னாமினுங்கின்றெ நுறுங்குவெட்டம்’, பிரியதர்ஷனின் ‘தேன்மாவின் கொம்பத்து’ போன்ற படங்கள் இவர் பணியாற்றிய முக்கியப் படங்கள். இவை தவிர ‘சித்ரம்’, ‘கிலுக்கம்’, ‘மிதுனம்’, ‘வந்தனம்’ உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் அசோசியேட் எடிட்டராகப் பணியாற்றினார் நாராயணன். இதில் ‘கிலுக்கம்’, ‘தேன்மாவின் கொம்பத்து’ போன்ற படங்கள் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்த படங்கள்.

1995-ம் ஆண்டில் நாராயணனுக்குத் திருமணம் நடந்தது. உறவினரான பாலாமணியை மணந்துகொண்டார். திருமண பந்தத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை நேர்கோட்டில் சென்றுகொண்டிருந்த வாழ்க்கை அதன்பிறகு ‘யூ டேர்ன்’ அடிக்கத் தொடங்கியது. ஏனெனில், நாராயணனின் மகன் உடல்குறைபாட்டுடன் பிறந்தார். குழந்தையால் நடக்க முடியாது. உடல் உறுப்புகள் வளர்ச்சியும் குறைவு. மகனின் நிலைமையால் நாராயணன் இடிந்துபோனார். மருத்துவமனை, மருந்துகள் என்று நாள்கள் ஓடின. சென்னையிலிருந்து அடிக்கடி ஊருக்குப் போக முடியாது என்பதால் திருவனந்தபுரத்துக்கு இடம்பெயர்ந்தார் நாராயணன். திருவனந்தபுரத்தில் ‘சித்ராஞ்சலி’ ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது திரைத்துறை டிஜிட்டல் மயமாகி இருந்தது. எனினும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் டிஜிட்டல் எடிட்டிங்கையும் கற்றுத்தேர்ந்து இருந்தார் நாராயணன்.

மகனது சிகிச்சைகள், அன்றாட வாழ்வின் சிக்கல்கள் துரத்த 2001-ம் ஆண்டில் சினிமா துறையைவிட்டு ஒதுங்கினார். சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றார். இடையே 2008-ல் ‘மின்னாமினுங்கின்றெ நுறுங்குவெட்டம்’ படத்தின் தயாரிப்பாளர் பாபு திருவல்லா ‘தனியெ’ என்ற படத்தை இயக்கினார். நட்பின் அடிப்படையில் அவர்  நாராயணனை எடிட்டிங் செய்து கொடுக்குமாறு அழைத்தார். அந்தப் படத்தில் நாராயணன் பணியாற்றினார். அந்தப் படத்துக்கு சிறந்த எடிட்டிங்குக்கான தனியார் தொலைக்காட்சி விருது கிடைத்தது. அதன்பிறகு சினிமா பக்கம் நாராயணன் போகவில்லை.

நாராயணனின் மகன் தர்ஷன் பையனூரில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் படிக்கிறார். அது அவர் வசிக்கும் இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மகனை பள்ளிக்குக் கொண்டு விடுவதற்காக ஆட்டோ ஒன்றை வாங்கினார் நாராயணன். மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, திரும்ப அழைத்து வருவது தவிர மீதிநேரங்களில் வருமானத்துக்கு ஆட்டோ ஓட்டுகிறார். ஆட்டோவுக்கு தன் மகன் பெயரான தர்ஷன் என்பதையே வைத்திருக்கிறார். ஆட்டோ ஓட்டும் நேரம் போக பையனூரில் உள்ள ஸ்டூடியோக்களுக்கு எடிட்டிங் வேலைகளும் செய்து கொடுக்கிறார்.

நாராயணனின் ஊரைச் சேர்ந்த இளைய தலைமுறைக்கு அவரைப் பற்றி எந்த விவரமும் தெரியாமல் இருந்தது. நண்பர் ஒருவர் நாராயணன் பற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதன்பிறகு அவரை ஒருசிலர் அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரிக்கிறார்களாம்.

ஒருவேளை நாராயணன் மிகச்சிறந்த எடிட்டராக ஆகியிருக்கக் கூடும். பல விருதுகள் வாங்கியிருக்கக் கூடும். காலத்தின் கருணையற்ற எடிட்டிங்கில் அவருடைய வாழ்க்கை காட்சிகள் மாறிப்போய்விட்டன. ஃபிலிம்ரோல்களைக் கட் செய்த கைகளை ஆட்டோ ஓட்டுநர் ஆக்கி இருக்கிறது காலம். எங்கே நிற்கும்… எப்போது வேகமெடுக்கும்… யாரை மிதித்து தள்ளும்…யாரை கோபுரத்தில் வைக்கும்… என்பதைக் கணிக்க முடியாத மாயம் இல்லையா வாழ்க்கை. அது நாராயணனுக்கும் இப்போது புரிந்திருக்கும்!