60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நெடுஞ்சாலை அருகே ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்… அவர் உடல் மொழியைப் பார்க்கும்போது மிகவும் தன்மையாகப் பேசிக்கொண்டிருப்பதுபோல்தான் தெரிகிறது. இவர் பேசுவதை சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாத எதிரில் இருந்த நபர் தன் காரை ஸ்டார்ட் செய்து எதிரில் பேசிக்கொண்டிருக்கும் 60 வயது மதிக்கத்தக்கவரின் மீது மோதிவிட்டு வேகமாகச் செல்கிறார். கார் மோதியதும் பதற்றப்படாத அந்தப் பெரியவர், காரின் பக்கவாட்டில் குதித்து உயிர் தப்பினார். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் மனம் பதபதைக்கிறது.

வீடியோவில் சமயோஜித புத்தியால் உயிர்தப்பித்த அந்தப் பெரியவரைத் தேடிப்பிடித்துப் பேசினோம்…
“நான் முகமது இக்பால் (60). மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் பயிற்சி வழக்கறிஞராக இருக்கிறேன். திருமங்கலத்தில் வசிக்கிறேன். நேற்று காலை 10 மணியளவில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த கார், என் காரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. அந்தக் காரை சேஸ் செய்து இடைமறித்து என் காரை நிறுத்தினேன். முதலில் கோவமாக அவரை நோக்கி `இடித்துவிட்டு நிற்காமல் வருகிறீர்களே’ என்று கேட்டேன். காருக்குள் ஒரு குழந்தை இருந்ததால் என் குரலை சற்றுக் குறைத்துக் கொண்டு தன்மையாகப் பேசினேன். ஆனால், அந்த நபர் பிடிக்கொடுத்து பேசவில்லை. மன்னிப்புகூட கேட்கவில்லை. `எனக்கு நேரமாச்சு.. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ..’ என்று சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்து நான் எதிரில் நிற்பதைக்கூட கண்டுகொள்ளாமல் வேகமாக மோதிவிட்டு கடந்தார். என் நல்ல நேரம் நான் உயிர் பிழைத்தேன். இந்தச் சம்பவத்தைக் கவனித்த அருகில் இருந்த ஹோட்டல் உரிமையாளர் ‘இங்கு நடந்தது எங்கள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நீங்கள் போலீஸிடம் புகார் கொடுங்கள்’ என்றார். நான் சிசிடிவி காட்சியுடன் மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த கார் அழகிரி பேப்பர் மில்ஸுக்கு சொந்தமானது என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. என்னை இடித்துவிட்டு சென்ற நபர் தலைமறைவாகிவிட்டார். இவரைப் போன்ற நபர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று முடித்தார்.
கார் மோதியதும் பதற்றப்படாமல் காரின் பக்கவாட்டில் ஜம்ப் செய்தீர்களே.. நீங்கள் சினிமா ஃபைட் மாஸ்டரா என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே “நான் Ex.service man” என்றார் முகமது இக்பால்!






