ஆசிரியர் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளில் சேவையாற்றவென சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி இன்று(23) காலை கொட்டகலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் ஆசிரிய கலாசாலை முன்னுள்ள ஹற்றன்  நுவரெலியா பிரதான வீதியில் குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

Capturecvc fbஆசிரியர் உதவியாளர்களை உடனே தரம் மூன்றிற்கு உள்வாங்கு, பயிலுநர் ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்காதே, அமைச்சர்கள் நாட்டில் ஆசிரியர்கள் ரோட்டில் போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், கறுப்பு பட்டி அணிந்து, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் 500 இற்கு மேற்பட்ட ஆசிரிய பயிலுநர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் உதவியாளர்கள் 2014.08.08 வர்த்தமானிக்கமைய 2015.05.19 ம் திகதி ஆசிரியர் உதவியாளர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டு இவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்தன.

அதனை தொடர்ந்து ஆறு மாதங்களின் பின் இவர்களுக்கு மேலும் 4000 ரூபா அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரம் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்துள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பாக தொழிற்சங்கங்களும், ஆசிரியர்களும் தமக்குள்ள இடர்பாடுகளை முன்வைத்து தம்மை நிரந்தரமாக்குமாறு பொறுப்பு வாய்ந்தவர்களிடம் கோரிக்கை முன்வைத்த போதிலும் அவர்கள் இதற்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க தவறிவிட்டனர்.

அத்தோடு இந்த ஆசிரியர் நியமனங்களுடன் வழங்கப்பட்ட ஒரு சில ஆசிரிய உதவியாளர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலினை மாற்றி நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமக்கு மாத்திரம் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாகவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.