ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன், இன்று தன் பணியை துவக்குகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் செப்டம்பர் 25ல் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆணையம், இன்று முதல் விசாரணையைத் தொடங்குகிறது.இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டனில் இருந்து விசாரணையைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது போயஸ் கார்டனில் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் அனைவரும் ஜெயலலிதா காலத்தில் பணிக்கு சேர்ந்தவர்கள்.
இவர்களை நியமித்தது சசிகலாதான் என்று கூறப்படுகிறது.இதனால், போயஸ் கார்டன் பணியாளர்கள் சசிகலாவிற்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள் என்று மன்னார்குடி குடும்பம் நம்பிக்கையோடு இருக்கிறதாம்.

போயஸ் கார்டனில் உள்ள பணியாளர்களுடன் மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தினமும் பேசி வருகிறார்களாம்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அவர்களுக்கு இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாம்.
போயஸ் கார்டனைப் பொறுத்தவரை, சசிகலாவை பற்றி எந்த வித எதிர்மறை தகவலும் வெளிவராது என்று சசிகலா குடும்பத்தினர் நம்பிக்கையோடு இருக்கிறார்களாம்.

இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்கள் தெரிந்தோர் உறுதிமொழி பத்திர வடிவில் நவவம்பர் 22க்கு முன் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான காலக்கெடு, இன்று முடிவடைகிறது. இதனையடுத்து விசாரணை கமிஷன் தனது பணியை துவக்குகிறது.
உயர் பதவியில் இருப்போரையும் விசாரிக்க வசதியாக, கூடுதல் அதிகாரம் கேட்டு, கமிஷன் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
வெளியில் தனியாகவும் பலர் ஜெயலலிதா இறப்பு குறித்த ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளனர்.

மேலும் சில தொலைக்காட்சிகளின் கைவசம் வீடியோ இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இவையெல்லாம் வெளிவர இருப்பதால், அதிகாரபூர்வமாக அமைச்சர்கள் ஒத்துக்கொண்டதை விட ஜெயலலிதா மரணத்தில் நிறைந்திருக்கும் பல திகில் மர்மங்கள் வெளிவரும்.
இதனால் தான் உயர்பதவியில் இருப்போரையும் விசாரிக்க கூடுதல் அனுமதி கேட்டுள்ளது விசாரணை கமிசன்.
பல பெரிய தலைகளும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதால், விசாரணை கமிசன் தனது அதிகார எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே செல்ல இருக்கிறது.






