குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம்: அய்யாக்கண்ணு

தமிழக விவசாயிகள்

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் விவசாயிகள் மத்தியில் பாஜக-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தால் 30 சதவீத வாக்குகள் வரை அக்கட்சிக்கு எதிராகச் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

`கிசான் முக்தி சன்சத்` என்ற பெயரில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற சாலையில், இந்தியாவிலுள்ள விவசாயிகள் அனைவரும் இணைந்து நடத்தும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இதில் இந்தியாவிலுள்ள 152 சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். இப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது அய்யாக்கண்ணு இதைத் தெரிவித்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் தற்கொலைக்கு எதிராக நடவடிக்கை, உற்பத்தி பொருளுக்கு லாபகரமான விலையை நிர்ணயித்தல் ஆகிய பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தில் தமிழக விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பேசிய பல விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு கவனிப்பதில்லை என்று குற்றம் சாட்டினர்.

விவசாயிகள் தற்கொலையை தடுக்க, மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சி வேண்டும் என்கின்றனர் தமிழக விவசாயிகள்.

“காருக்கு இழப்பீடு இருக்கு; எங்களுக்கு இல்லையா?”

வறட்சி அல்லது அதிக மழையால் பயிர்கள் வீணாகி ஏற்படும் நஷ்டமே தங்களை அதிகம் பாதிப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜான் மெல்கியோராஜ்

ஒரு பகுதியில், 100 ஏக்கர் நிலத்தில் 33 ஏக்கர்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், இந்த 100 ஏக்கருக்கு சொந்தமான அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு அளிக்கப்படுகிறது. அதுவே அந்த பரப்பளவு 33 ஏக்கரை எட்டவில்லை என்றால் இழப்பீடு அளிக்கப்படுவதில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

“ஒவ்வொரு காருக்கும் விபத்திற்கான காப்பீடு என்பது தனித்தனியே அளிக்கப்படுவது போல, விவசாய நிலங்களுக்கு ஏன் அளிக்கப்பதில்லை?” என்ற கேள்வியை முன்வைக்கிறார், லால்குடி பகுதியை சேர்ந்த ஜான் மெல்கியோராஜ்.

“பொருளுக்கு லாபமான விலைகொடுங்கள்; மானியம் தேவையில்லை”

தமிழகத்தில், ரேஷன் கடைகளில், ஒரு கிலோ சர்க்கரையின் விலை, 25 ரூபாய். ஆனால், கரும்பு ஒரு டன் 2350 ரூபாய் என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார் அவர்.

“நுகர்வோர் பொருளுக்கான விலையில் மாற்றம் வரும்போது, விவசாய விளைபொருளுக்கான விலையிலும் அது பிரதிபலிக்கவேண்டும். அரசு, தற்போதுள்ள விவசாயக்கடனை தள்ளுபடி செய்து, எங்களின் பொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயித்து அளித்தால் போது, பிறகு நாங்கள் மானியமே கேட்க மாட்டோம்` என்கிறார் மெல்கியோராஜ்.

“வங்கி அதிகாரிகளின் வார்த்தைகளை கேட்கமுடியவில்லை”

விவசாயிகளால் வாங்கப்படும் கடனை திரும்ப வசூலிக்க வங்கி அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மோசம் என்று குற்றம் சாட்டுகின்றனர் தமிழக விவசாயிகள்.

தங்களை மிகவும் இழிவாக நடத்துவதாக கூறும் அவர்கள், ஆண்கள் இல்லாத போது, வீட்டில் உள்ள பெண்களை மிரட்டுவதாகவும், தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

செல்வராஜ்

“அடுத்த தலைமுறைக்கு விவசாயிகள் இல்லை”

எங்கள் குடும்பங்களில் விவசாயம் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாங்களே இருப்போம் என்கிறார் செல்வராஜ்.

விவசாயம் செய்யது பணம் ஈட்ட, ஒரு விவசாயி எவ்வளவு அவமானங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொள்கிறான் என்பதை குழந்தைகள் பார்த்துப்பார்த்து இப்படி ஒரு பதிலை அளிக்கிறார்கள் என்கிறார் அவர்.

“பத்து வருடத்திற்கு பிறகு விவசாயம் பார்க்க தமிழக கிராமங்களில் ஆளில்லை. வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்தாவது பிழைத்துக் கொள்கிறோம் என்று எங்களிடமே எங்கள் பிள்ளைகள் கூறுகிறார்கள்” என்று வருந்துகிறார் செல்வராஜ்.

இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பகளுக்கு நிவாரணம் அளிப்பதும், நாங்கள் கொள்முதல் செய்யும் பொருளுக்கு லாபகராமான விலையை கொடுப்பதும் அரசின் கடமை. அவை கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என்கிறார்கள் விவசாயிகள்.