டெங்குக் காய்ச்சலுக்கு 15 நாள் சிகிச்சை; 16 லட்ச ரூபாய் பில்..! குழந்தையைப் பறிகொடுத்த தந்தையின் வேதனைக் குரல்

டெல்லியின் குர்காம் பகுதியிலுள்ள  ஃபோர்டிஸ்(Fortis) தனியார் மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலுக்கு 18 லட்ச ரூபாய் பணம் வசூல் செய்துள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நீதிவேண்டும் என்று கோரியுள்ளனர்.


உயிரிழந்த சிறுமி அதியா

குஜராத் மாநிலம் துவார்காவைச் சேர்ந்த ஜெயந்த் சிங் என்பவர், அவரது 7 வயது குழந்தை அதியாவை டெங்குக் காய்ச்சல் பாதிப்புக்காக டெல்லியின் குர்காம் பகுதியிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31-ம் தேதி அனுமதித்துள்ளார். ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 15 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டப் பிறகு குழந்தை இறந்துள்ளது. 15 நாள்கள் சிகிச்சைக் கட்டணமாக 16 லட்ச ரூபாய் மருத்துவமனை நிர்வாகத்தால் வசூல்செய்யப்பட்டுள்ளது.

தற்போது இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக ஜெயந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அதியா துவார்காவிலுள்ள ராக்லேண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஆகஸ்ட் 31-ம் தேதி குர்காமிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்குச் கொண்டு சென்றேன். அங்கு கொண்டு சென்றவுடன், அவள் மயக்கமடைந்தாள். பின்னர், அவளை மூன்று தினங்களாக வெண்டிலேட்டரில் வைத்திருந்தனர். நான்காம் மற்றும் ஐந்தாம் நாள் மருத்துவர்கள் வரவில்லை.

எங்களுக்கும் மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் ஏதும் தரப்படவில்லை. நாங்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தோம். 13 ரூபாய் மதிப்புள்ள பிளட் சுகர் டெஸ்டிங் ஸ்டிரிப்புக்கு 200 ரூபாய் பணம் வசூல் செய்துள்ளனர். எங்களிடம் இருந்த 3 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை முடிந்த நாளிலிருந்து, ஒவ்வொரு நாளைக்கான பணத்தை கட்டச் சொல்லி வற்புறுத்தினர். ஏழு நாளுக்குப் பிறகு, அதியாவின் மூளை கடுமையாக சேதமடைந்துள்ளது.

அவளுடைய உடல் உறுப்புகள் செயலிழந்துவருகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், அவள் டையாலிஸிஸ் செய்யப்பட்டாள். மூன்று நாள்கள் டையாலிஸிஸ் அறையில் இருந்தாள். அதியாவுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்தப் பிறகு, அவளுடைய மூளை 70-80 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவள் உயிர் பிழைத்தாலும், வழக்கமான முறையில் இருக்கமுடியாது என்று மருத்துவர் தெரிவித்தார். அதே நேரத்தில், ஒரு மருத்துவர், என்னுடைய மனைவியிடம், அதியாவுக்கு முழு உடல் பிளாஸ்மா மாற்று சிகிச்சை செய்தால் அவளைக் காப்பாற்றலாம். அதற்கு 13-15 லட்ச ரூபாய் ஆகும் என்று தெரிவித்தார்.

அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர், நான் ஆதியாவை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்துகொண்டு, மீண்டும் ராக்லேண்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றேன். அங்கு இ.சி.ஜி சோதனை செய்த மருத்துவர்கள் ஆதியா இறந்ததாக தெரிவித்தனர். ஆனால், ஆதியா ஃபோர்டிஸ் மருத்துவமனையில் ஐ.சி.யுவில் இருக்கும்போதே இறந்திருக்கவேண்டும். ஃபோர்டிஸ் மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போதே ஆதியாவின் உடல் நிறம் மாறியிருந்தது. தோல் சுருங்கிய நிலையில் இருந்தது. ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்’ என்று ஜெயந்த் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம்குறித்து தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ‘அதியா, தீவிர டெங்கு பாதிப்பு நிலையில் அனுதிக்கப்பட்டாள். அவளுக்கு ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைவது தொடர்ச்சியாக அதிகரித்தது. அவளுடைய நிலை மோசமடைந்ததால், தொடர்ச்சியாக 48 மணி நேரம் வெண்டிலேட்டரில் வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் குழந்தையின் தீவிரமான நிலைகுறித்து அவளது குடும்பத்தினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

சிகிச்சையின்போது, அனைத்து மருத்துவ நெறிமுறைகளும், வழிகாட்டுதல்களும் முறையாக பின்பற்றப்பட்டன. ஐ.சி.யுவில் சிகிச்சைப்பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொற்று பாதிக்காத மருத்துகள் அளிக்கப்பட்டன. அனைத்து மருந்துகளுக்கான விலையும் வெளிப்படையாக தரப்பட்டுள்ளன. வழக்கமான கட்டணமே வாங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘இதுதொடர்பான விவரங்களை அளியுங்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் பில் முழு விவரம் : 

சேர்க்கைக் கட்டணம் – 1,250 ரூபாய்
ரத்தம் வங்கி – 61,315 ரூபாய்
டைக்கோனிஸ்டிக்ஸ் – 29,290 ரூபாய்
மருத்துவர் கட்டணம் – 53,900 ரூபாய்
மருந்துகள் – 3,96,732 ரூபாய்
உபகரணங்கள் கட்டணம் – 71,000 ரூபாய்
விசாரணைகள் – 2,15,594 ரூபாய்
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை – 2,85,797 ரூபாய்
மருத்துவப் பொருள்கள் – 2,73,394
இதரச் செலவுகள் – 15,150
அறை வாடகை – 1,74,000
தள்ளுபடி – 20,000
மொத்தம் – 15,79,322 ரூபாய்