இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து, ஜெனீவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் உலக பருவகால ஆய்வுக் கூட்டத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்படவுள்ளது.
கடந்த 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, இந்த ஆய்வுக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
இதன்படி 2012ம் ஆண்டு இடம்பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகளை, முன்னைய இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்தது.
இந்த பரிந்துரைகளின் அமுலாக்கம், மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களின் முன்னேற்றம் என்பவை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் பல கேள்விகளை முன்வைக்கவுள்ளன.
அவற்றுடன் புலம்பெயர்ந்த அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான அறிக்கைகளை முன்வைத்துள்ளன.
இவற்றுக்கு பதில் வழங்குவதற்காக, இலங்கை சார்பில் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமையிலான குழு ஒன்று ஜெனீவா சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







