அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்த விசாரணை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று 7வது முறையாக நடந்து முடிந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து விரைவில் முடிவு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவினை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது.
இதுவரை 6 முறை இது தொடர்பான விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் இன்று 7வது முறையாக இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்தது.
இன்று நடந்த விசாரணையில் அ.தி.மு.கவின் எடப்பாடி தரப்பிலும் டி.டி.வி.தினகரன் தரப்பிலும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
விசாரணை தொடர்பாக எடப்பாடி அணி சார்பில் அமைச்சர் சி.வி. சண்முகம், தளவாய் சுந்தரம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டிருந்தனர்.
விசாரணை முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம். ஒருவாரத்திற்குள் தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரன் தரப்பு வாதத்தில் உள்ள தவறுகளை, எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். வாதங்கள் இன்று நிறைவு பெற்றது, அடுத்த உத்தரவை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
மேலும், வாதம் ஏதேனும் இருந்தால், எழுத்துப்பூர்வமாக வரும் திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க சின்னம் தொடர்பாக நவம்பர் 10ஆம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்த நிலையில், முடிவு தாமதமாக வரும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நிகழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதிவரை முடிவு எட்டப்படாமல் இழுப்பறி நிலையிலேயே சென்று கொண்டிருப்பது சின்னம் முடங்குவதை சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






