குரங்குகளின் தேர்தல் முடிவு! சாத்தியமா?

இந்தியாவின் வட மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் அதிகரித்துவரும் குரங்குகளின் எண்ணிக்கை மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. தற்போதைய தேர்தலில் முக்கிய பிரச்சனையாக முன்வைக்கப்படுவது குரங்குகளில் தொல்லையாகும்.

மாநில தலைநகர் ஷிம்லாவில் குரங்குக் கூட்டங்கள் எல்லா இடத்திலும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. வானரப் படைகள் தங்கள் குறும்புத்தனமான நடவடிக்கைகளால் அனைவரையும் அச்சுறுத்துகின்றன.

Evening-Tamil-News-Paper_24599421025ஷிம்லாவில் கடைகள், சந்தைகள், சாலைகளில் என எங்குபார்த்தாலும் மனிதர்களின் அளவுக்கு குரங்குகளின் நடமாட்டமும் இருக்கிறது. அனைவரும் அச்சத்திலேயே இருக்கிறார்கள்.

குரங்குகள் பல்கிப்பெருகி, ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தனது சாம்ராஜ்ஜியத்தை விரித்துக் கொண்டே செல்கின்றன. விவசாயத்தையும், பயிரையும் நாசப்படுத்தி மிகுந்த சேதத்தை விளைவிக்கின்றன. அரசுத் தரவுகளின்படி, ஆண்டுதோறும் 150 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பயிர்களையும் உணவுப்பொருட்களையும் குரங்குகள் நாசம் செய்கின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் தேர்தல் வேட்பாளருமான டாக்டர் பிரமோத் ஷர்மா, “குரங்குகளால் ஏற்படும் பேரழிவை தடுப்பதற்காக விவசாயிகள் வேலி அமைக்கிறார்கள். வலை விரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் பிற மாநில விவசாயிகளைப் போலவே ஹிமாச்சல் பிரதேச மாநில விவசாயிகளும் மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டு இறுதியில் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டியதுதான்” என்கிறார்.

குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் அது விழலுக்கு இறைத்த நீராக வீணாகப்போனது. குரங்குகளின் பிரச்னை மனிதர்களை மட்டுமல்ல, மாநில அரசியலையும் பதம் பார்த்து, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக மாறிவிட்டது.

ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தலில் காங்கிரசும், பாஜகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக குரங்குகளின் பிரச்சனையை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.ஆனால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்ன? பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு பிடித்த கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் குரங்குகளை பிடித்து அரசை பிடிக்கும் கதையை முதன்முதலாக கேட்கிறோம்.

மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் குரங்குகளின் பிரச்சனையை தீர்ப்பதாக வாக்குறுதிகளை அளித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு குரங்கு சக்திவாய்ந்ததா? ஆம் என்றால் ஆச்சரியம் ஏற்படுகிறதா? ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதர்சனமான உண்மை இதுதான்.