நிலம் இருந்தும் சொந்த வீடுகூட இல்லாமல் செத்து மடிந்த ஜமீன் வாரிசு!

15 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு உரிமையாளராக இருந்த கேசவலு ஜமீன், தனது இறுதிக் காலத்தில் சொந்த வீடுகூட இல்லாமல் மரணமடைந்த சம்பவம், தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேசவலு ஜமீன்

தருமபுரியை அடுத்துள்ள மிட்டாநூல அள்ளி ஜமீன்தாராக வாழ்ந்தவர், கேசவலு ஜமீன். ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பு 1735-ம் ஆண்டு முதல் கேசவலு ஜமீன் வம்சம் அதிகாரபூர்வமாக வாழ்ந்து வந்ததற்கான ஆவணங்கள் இன்றும் உள்ளன. அதன்பிறகு, 1880-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும் கேசவலு ஜமீன் மிகச்சிறப்பான முறையில் தங்கள் பகுதிகளை நிர்வகித்து வந்ததற்கான ஆவணங்கள், கல்வெட்டுகள் தருமபுரி மாவட்டத்தில் காணப்படுகின்றன. கேசவலு ஜமீனாக இருந்தபோதே, 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை அவர்கள் காலத்தில் நிர்வகித்துவந்துள்ளார். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஜமீன்தார் முறை ஒழிப்பு நடவடிக்கையால், இவர்களிடம் இருந்த 2 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. இதனால் மனமுடைந்த கேசவலு ஜமீன், தனது குடும்பத்துடன் இருப்பிடத்தை காலிசெய்துவிட்டு ஆந்திரா சென்றுள்ளார்.

ஆனால், காலங்கள் உருண்டோடி, மீண்டும் கேசவலு ஜமீனின் வாரிசான சந்தானம் நாயுடு தருமபுரியில் உள்ள காந்தி நகரில் குடியேறினார். புகைப்படத் தொழில் செய்துவந்த தனது இரண்டு மகன்கள் செல்வம், ரவி மற்றும் மகள் சாந்தி ஆகியோருடன் வாழ்ந்துவந்தார் சந்தானம். இந்த நிலையில், ஜமீன் குடும்பத்துக்கு இந்திய அரசு வழங்கிய சில சலுகைகளைப் பெற  நண்பர்களும் உறவினர்களும் அறிவுறுத்தவே, கேசவலு ஜமீன் பரம்பரை தொடர்பான ஆவணங்களை அரசு ஆவணக் காப்பகங்கள் மூலம் சேகரித்துள்ளார். அப்போது, கேசவலு ஜமீனுக்குச் சொந்தமான 2 லட்சம் ஏக்கர் நிலங்களில் இன்னமும் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தவில்லை என்ற விவரத்தை அறிந்துள்ளார் சந்தானம். அதைத் தகவல் அறியும் சட்டத்தின்மூலம் பெற்று, தருமபுரி மாவட்ட நிர்வாகத்திடம் அணுகி, ஆவணங்களைக் காட்டி பட்டா வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர் கேசவலு ஜமீன் வம்ச வாரிசுகள்.

இந்திய அரசின் சட்ட விதிகளும் சாதகமாக இருக்கவே, தருமபுரி மாவட்ட நிர்வாகம், கேசவலு ஜமீன் வாரிசுகள் கேட்கும் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எங்கிருந்து கொடுக்க முடியும்? எல்லாம் கிராமங்களாக மாறி, புதிய நிர்வாகக் கட்டமைப்பில் இருப்பதால், கேசவலு ஜமீன் கோரிக்கை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தொடர்ந்து கால தாமதம் செய்துவந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், சந்தானம் நாயுடு 84 வயது வரை நிலத்துக்காகப் போராடி, தனது கடைசிக் காலத்தில் சொந்த வீடுகூட இல்லாமல், ஜமீன் வாரிசு என்ற பெருமையுடனே கடந்த நவம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.  கேசவலு ஜமீன்தார் வாழ்ந்த காலத்தில், 15 கோயிகளுக்கு பராமரிப்பு மற்றும் பூஜை செலவுகளுக்கு 700 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார். அன்றைய அரசுக்கு இலவசமாக வானொலி நிலையம் அமைக்க நிலம் வழங்கியது, பள்ளிகள் கட்ட நிலத்தை வழங்கியதற்கான கல்வெட்டுச் சான்றுகள், இன்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியில் உள்ளது. வாழ்ந்தபோது தான தர்மம் என்றிருந்த கேசவலு ஜமீன் வம்சத்தினர், இன்று சொந்த வீடுகூட இல்லாமல் இறந்துள்ளது அப்பகுதியினரை வருத்தமடைய வைத்துள்ளது.

சந்தானத்தின் மகன் செல்வம் நம்மிடம் கூறுகையில், “எங்கள் ஜமீன் குடும்பத்தின் வழியாக வந்த 60 குடும்பங்கள் தற்போது இருக்கின்றன. 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசிடம் கேட்கவில்லை. ஜமீன் வம்சத்துக்கு இந்திய அரசு வழங்கியுள்ள சலுகைகளை வழங்கினாலே போதுமானது என்கிறோம்” என்று வேதனையோடு தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட நிர்வாகம், கேசவலு ஜமீன் குடும்பத்துக்கு வாழ்வதற்கு வீட்டு மனையாவது கொடுக்குமா என்றுதான் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.