வீதியில் கண்டெடுத்த 4,11,000 ரூபா பணத்தை கண்டெடுத்த முச்சக்கர வண்டி சாரதியான விஸ்வநாதன் பஞ்சசீலன் கண்டி பொலிஸாரின் ஊடாக உரியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.
கண்டி நகரில் –முச்சக்கரவண்டி செலுத்தும் இளைஞரான விஸ்வநாதன் பஞ்சசீலன் தனது முச்சக்கரவண்டியை கண்டி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மாவத்த வீதியில் நிறுத்த முற்பட்டபோது அநாதரவான நிலையில் காணப்பட்ட பார்சல் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார்.
அதனை சந்தேகத்தில் அவர் பிரித்து பார்த்த போது, அதனுள் 4,11,000 ரூபா பணம் இருப்பதை கண்டு அவர் அதனை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக கண்டி பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று பொலிஸ் உயரதிகாரிகளிடம் விபரத்தை கூறி, அதனை அதன் உரிமையாளரைக் கண்டு பிடித்து ஒப்படைக்க தான் விரும்புவதாகத் தெரிவித்து பணத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
பொலிஸார் பெரும் முயற்சிகளைக் கொண்டு உரியவரை கண்டு பிடித்தனர். அவர் காலி ஹினிதும பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவராவார்.
குறித்த வர்த்தகர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீ தலதாமாளிகைக்கு வழிபாடுகளில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.
தமது வழிபாடு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் அன்றைய தினம் இரவை கண்டியில் கழிக்க முற்பட்டு விக்கிரமராஜசிங்க மாவத்தையில், வாகன தரிப்பிடத்தில் தமது காரை நிறுத்தி விட்டு முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இரவு வேளை தங்குவதற்கான சிறந்த விடுதிகளை கேட்டுள்ளார்.
விபரங்களை அறிந்து கொண்ட வர்த்தகர் கண்டி வாவிக்கரை அருகில் உள்ள விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கு தனது காரை நிறுத்திவிட்டு தனது பணப்பையை தேடியுள்ளார். ஆனால், அது இருக்கவில்லை.
இதேவேளை, அவர் கண்டிக்குச் செல்லும் வழியில் நிட்டம்புவயில் பகல் உணவுக்காக விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தார்.
தான் அங்குதான் பணப்பையை தவறவிட்டிருக்கலாம் எனக் கருதி அங்கு விரைந்து சென்று விசாரித்த போது விடுதியின் சி.சி.டி.வி கெமராவை பார்த்தபோது குறித்த வர்த்தகர் பணப்பையுடன் அங்கிருந்து வெளியேறுவது தெரிய வந்துள்ளது.
இதனால் அப்பணம் தமக்கு கிடைக்கப் போவதில்லை என்று கருதி ஹினிதுமைக்கு திரும்பி விட்டார். விஸ்வநாதன் பஞ்சீலன் கண்டெடுத்த பணப் பொதியில் உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையும் காணப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு பொலிஸார் உரியவரை ஹினிதும பொலிஸார் மூலம் தொடர்பு கொண்டு கண்டிக்கு வரவழைத்து விசாரணை செய்த பின்னர் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி உரியவரிடம் விஸ்வநாதன் பஞ்சீலன் மூலம் கையளிக்கச் செய்தனர்.
முச்சக்கரவண்டி சாரதியான விஸ்வநாதனின் இந்த நேர்மையான செய்கையை பொலிஸ் அதிகாரிகளும்,குறிப்பிட்ட வர்த்தகரும் பாராட்டியதோடு, உரிமையாளரான வர்த்தகர் அவரின் நேர்மைக்காக 100,000 இலட்சம் ரூபா பணத்தை பரிசாக தொடுத்த போதும் அவர் அதனை பெரும் தன்மையோடு வாங்க மறுத்து விட்டார்.
நாட்டில் இவ்வாறானவர்கள் இருப்பதனால் தான் மழையே பெய்கின்றது. இவ்வாறான மனிதர்களுக்கு எத்தனை சல்யூட் அடித்தாலும் தகும்.