மால்டாவில் அரசை விமர்சித்த வலைப்பதிவர் கார் குண்டு வெடித்து பலி!

தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டா. இங்குள்ள அரசு ஊழலில் ஈடுபட்டதாக விமர்சித்த பிரபல பதிவர் டாஃப்னே கருவானா கலிஜியா கார் குண்டு வெடித்துப் பலியானார்._98345352_dd3da6ee-06a5-4506-9544-8d1583845026

53 வயதான இந்தப் பதிவர் பிட்நிஜா என்னும் இடத்தில் உள்ள தமது வீட்டில் இருந்து கிளம்பிய கொஞ்சநேரத்தில் அவர் ஓட்டிச் சென்ற கார் வெடித்துள்ளது.

வெடிச்சத்தம் கேட்டு அவரது மகன் ஒருவர் ஓடிச் சென்று பார்த்துள்ளார்.

மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம்தான் மால்டா. அந்நாட்டின் பிரதமர் ஜோசஃப் மஸ்கட் இச் செயலை கண்டித்துள்ளார்.

ஜோசஃப் மஸ்கட்டுக்கும், அவரது மனைவி மிச்செலுக்கும் பனாமா பேப்பர்ஸ் ஊழலில் தொடர்பு இருப்பதாக எழுதியவர் டாஃப்னே. இதனை மறுத்துவந்த ஜோசஃப் மஸ்கட், இந்தக் குற்றச்சாட்டு காரணமாக முன்கூட்டியே தேர்தல் நடத்தினார்.

நான்கு மாதங்கள் முன்பு நடந்த இத் தேர்தலில் அவரது தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது.

“ஒரு நபரின் மீதும், நாட்டின் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறேன். என்னையும், மற்றவர்களையும், அரசியல் ரீதியாகவும், தனிப்பட்டமுறையிலும் தாக்கிவந்தவர் டாஃப்னே கருவானா என்பது எல்லோருக்கும் தெரியும்.

எனினும், இவ்விதமான தாக்குதலை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. நீதியை நிலைநிறுத்தாமல் நான் ஓயமாட்டேன்,” என்று தெரிவித்துள்ளார் ஜோசஃப் மஸ்கட்.

ஜோசஃப் மஸ்கட் மற்றும் அவரது மனைவி மிச்செல்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தமக்கு அச்சுறுத்தல் வந்ததாக போலீசில் புகார் கூறியுள்ளார் டாஃப்னே. அவருக்கு இரங்கல் தெரிவித்து ஸ்லியமா நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தினர்.