நள்ளிரவில் மாயமான வரித்துறை துணை ஆணையர்!

கோவை மாவட்ட வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமாரைக் காணவில்லை என அவரின் உறவினர்கள் பீளமேடு காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவக்குமார்தான் வீட்டில் இல்லை. ஆனால், அவரது செல்ஃபோன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்கள் வீட்டில் இருந்திருக்கின்றன.  அதனால், சிவக்குமார் எங்கே போனார். என்ன ஆனார் என்று தெரியாமல் அவரின் குடும்பத்தினர் தவித்திருக்கிறார்கள். சிவக்குமாரைத் தொடர்புகொள்ள வழியில்லாததால் பதறிப்போன அவர் குடும்பத்தினர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சி.சி.டிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர். சி.சி.டிவி காட்சியில் நள்ளிரவில் சிவக்குமார் சிறிய பெட்டியோடு வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிப் பதிவாகியுள்ளது. மற்றபடி சிவக்குமார் பற்றிய வேறெந்தத் தகவலும் தெரியவரவில்லை.

இந்நிலையில், சிவக்குமாரைக் காணவில்லையென அவரின் சகோதரர் ராம்குமார் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவியிடையே தகராறு இருந்து வந்ததாகவும், குடும்ப பிரச்னை காரணமாக சிவக்குமார் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது.