அகுரஸ்ஸ – திப்பொடுவாவ பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கப்பம் கோரும் கும்பல் ஒன்று உருவாகியுள்ளதாகவும் இக் கும்பலில், மாணவ, மாணவிகள் உள்ளடங்கியுள்ளதாகவும், இக் குழுவானது ஏனைய பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் பறித்து மது அருந்துதல், புகை பிடித்தல், கஞ்சா விற்பனை என்பற்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் புத்திக பதிரண மற்றும் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன ஆகியோர் தலைமையில் நேற்று இடம்பெற்ற அகுரஸ்ஸ ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதன் போது அகுரஸ்ஸ முச்சக்கர வண்டி சங்க தலைவர்
“கப்பம் கோரும் பாடசாலை மாணவர்களின் நடவடிக்கை மிக வருந்த தக்க விடயமாகும்.
குறித்த கும்பலிற்கு பணம் கொடுக்காமல் மாணவர்களால் தப்பித்து வாழ முடியாதுள்ளது. பணம் கேட்டு கொடுக்காத பட்சத்தில் அப்பாவி மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்கின்றனர் இதற்கு பயந்த மாணவர்கள் பணம் கொடுத்து தப்பி விடுகின்றனர்.
குறித்த கும்பல் பாடசாலை முடிந்து செல்வதை பார்க்கும் போது ஹிந்தி திரைப்படத்தில் வரும் காட்சிகள் போலுள்ளது.
குறித்த கும்பலின் தலைவர் முன்னால் செல்ல இன்னும் பத்து, பண்ணிரண்டு பேர் தலைவரின் புத்தகப் பை, கைப்பேசி மற்றும் தண்ணீர் போத்தல் என்பவற்றை சுமந்து செல்கின்றனர்.
அண்மையில் குறித்த கும்பலின் தலைவரை பாதையில் வைத்து பொலிஸார் கஞ்சாவோடு கைது செய்து நீதி மன்றில் ஆஜர் படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல் பச்சை குத்தும் கருவி ஒன்றையும் பாடசாலைக்குள் கொண்டு வந்து மாணவர்களின் மார்பு மற்றும் தோற் பட்டைகளிலும், மாணவிகளின் கால் தொடை மற்றும் கைகளிலும் பச்சை குத்தியுள்ளதாக ஏனைய மாணவர்கள் பாடசாலை அதிபருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இக் கும்பலை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு காரணம் சில பிரத்தியேக வகுப்பு நடாத்தும் ஆசிரயர்களே, இந்த ஆசிரியர்கள் தமது பிரத்தியேக வகுப்பிற்கு வரும் மாணவர்கள் செய்யும் தவறுகளை கண்டுக் கொள்வதில்லை, அவ்வாறு பாடசாலை நிர்வாகம் தண்டிக்க முற்படும் பொழுது அவர்கள் முன்னின்று குறித்த கும்பலைச் சேர்ந்த மாணவர்களை காப்பாற்றுகின்றனர்.
ஒவ்வொரு கடைகளிலும் பணடோல் விற்பனை செய்வது போல அகுரஸ்ஸ பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது . இந் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேலும் இவ்வாறு முறை கேடாக நடந்து கொள்ளும் மாணவ கும்பலுக்கெதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.