ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் முள்ளிவாய்க்காலுக்கு திடீர் விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன் பிரகாரம் நேற்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த ஐ.நா. குழுவினர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் போரால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் பொருட்டு வருகைதந்திருந்தனர்.

இதன்படி முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவு கற்கள் அமைக்க பட்டுள்ள சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள போரில் படுகொலையானவர்களின் நினைவு தூபியை பார்வையிட்டதோடு போரின் எச்சங்களாக மிஞ்சியுள்ள அடையாளங்களையும் பார்வையிட்டார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரும் முறைப்பாடுகளை குறித்த குழுவினரிடம் முன்வைத்திருந்தனர்.

கடந்த மே 18 அன்று குறித்த சின்னப்பர் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் நினைவு கற்கள் அமைக்கப்பட்டு நடைபெறவிருந்த நிகழ்வு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடை விதிக்கப்பட்டதோடு அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட அருட்தந்தை எழில்ராஜன் விசாரணைக்காக பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.