ஒரு மெயில், போன் அழைப்பு! – கண்ணூரிலிருந்து ஓட்டம் பிடித்த அமித்ஷா

கேரளாவின் கண்ணூர் மாவட்டம், வன்முறைக்கும் மத மோதல்களுக்கும் பெயர்பெற்றது. 2001-ம் ஆண்டு முதல் கேரளத்தில் 120 பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 84 கொலைகள் கண்ணூரில் மட்டும் நடந்துள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியது. கேரளாவில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில், ‘மக்களைப் பாதுகாப்பு ‘ என்ற பெயரில் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் வரை பாரதிய ஜனதா கட்சி யாத்திரை நடத்திவருகிறது.

கேரளாவில் இருந்து அமித்ஷா ஓட்டம்

கடந்த 3-ம் தேதி, தொடங்கிய யாத்திரையை பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா தொடங்கிவைத்தார்.  அக்டோபர் 17-ம் தேதி, திருவனந்தபுரத்தில் பேரணி நிறைவடைகிறது. முதல் 3 நாள்களும், அதைத் தொடர்ந்து யாத்திரையின் நிறைவு நாளிலும் பங்கேற்க வேண்டுமென்பது அமித்ஷாவின் திட்டம். இந்த பிளானுடன்தான அமித்ஷா கேரளா வந்திறங்கினார்.கண்ணூரில்உள்ள ராஜராஜேஸ்வரர் கோயிலில், கேரள பாணியில் முண்டு கட்டி வழிபட்டார்.

இந்நிலையில்,  ‘தி வயர்’ இணையதளம் அமித்ஷாவின் மகன் நடத்திவரும் ‘டெம்பிள் என்டர்பிரைசஸ் ‘ நிறுவனத்தின் சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு உயர்ந்ததாகச் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் செய்தியை வெளியிடுவதற்கு முன்னர், ‘தி வயர்’ இணையதளம் அமித்ஷாவின் மகனுக்கு விளக்கம் கேட்டு இ-மெயில் செய்துள்ளது. அதைப் பார்த்த ஜூனியர் ஷா பதறிப்போனார். உடனடியாக தந்தைக்கு போன்செய்து விவரத்தைக் கூறி கதறியுள்ளார்.

மகனின் பதற்றத்தையடுத்து,  யாத்திரையில் சென்றுகொண்டிருந்த பாரதிய ஜனதா தொண்டர்களை அப்படியே விட்டுவிட்டு, டெல்லிக்கு விமானம் பிடித்தார் அமித் ஷா. டெல்லி திரும்பியதும் பிரதமர் மோடி, நிதியமமைச்சர் அருண் ஜெட்லி, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ரயில்வே துறை பியூஸ் கோயல் ஆகியோரைத் தொடர்ச்சியாக சந்தித்து விளக்கமளித்தார் .மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுடன் வழக்குத் தொடர்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷா பதறிப்போய் டெல்லி ஓடுவதற்குக் காரணமும் உண்டு. அமித்ஷாவுக்கு முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக இருந்த நிதின் கட்ரியும், இதே போன்ற ஒரு குற்றச்சாட்டால்தான் பதவி விலகினார். 1995-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை மகாராஸ்டிர மாநில பொதுப் பணித்துறை அமைச்சராக நிதின் கட்கரி இருந்தபோது, அவர் தலைவராக இருந்த புர்தி குழுமத்துக்கு பல்வேறு ஒப்பந்தங்களை, விதிமுறைகளை மீறி வழங்கியதாகப் புகார் எழுந்தது. அப்போது, ராம்ஜெத்மலானி, அத்வானி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கடும் நெருக்கடிகொடுத்ததையடுத்து, நிதின் கட்கரி பதவி விலகினார். அமித்ஷாவுக்கும் இதே போன்ற நெருக்கடியை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைகள் கொடுத்தால், விரைவில் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக நேரிடலாம்.