யாருக்கு அறிவு அதிகம்? டிரம்ப் சவால்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீய செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சொன்னதாகக் கூறப்படுவதைப் பற்றி கேட்டபோது, அவருக்கும் எனக்கும் ஐ.க்யூ. டெஸ்ட் எனப்படும் அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டு டிரம்ப் சவால் விடுத்துள்ளார்.

201710052115135711_US-foreign-affairs-chief-Rex-Tillerson-denies-quit-claims_SECVPF

டில்லர்சன் அப்படிச் சொன்னதாக வெளியானது பொய்ச்செய்தி என்று மறுத்த டிரம்ப், அப்படிச் சொல்லியது உண்மை எனில் இருவருக்கும் அறிவுச் சோதனை வைத்து முடிவுகளை ஒப்பிட்டுப் பார்ப்போம். யார் வெற்றி பெறுவார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும் என்றார் டிரம்ப்.

ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் டிரம்ப்.

செவ்வாய்க்கிழமைதான் டிரம்ப்பும் டில்லர்சனும் இணைந்து உணவருந்தினர்.

“நான் யாரையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. குறைத்து மதிப்பிடுவதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை,” என்று செய்தியாளர்களிடம் கூறினார் டிரம்ப்.

அது நகைச்சுவை…

அறிவுச் சோதனை செய்யலாம் என்று டில்லர்சனுக்கு டிரம்ப் விடுத்த சவால் குறித்துக் கேட்டபோது, வெள்ளை மாளிகையின் பத்திரிகை தொடர்புப் பிரிவின் செயலாளர் சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், “அது ஒரு நகைச்சுவை. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு வேண்டும்,” என்று தெரிவித்தார்.

வடகொரியா, இரான் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைச் சிக்கல்களை அமெரிக்கா எதிர்கொண்டிருக்கும் நிலையில், டிரம்புக்கும், ராஜீயத் துறை செயலர் டில்லர்சனுக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. (அமெரிக்காவின் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் அல்லது ராஜீயத்துறை செயலாளர் என்பது வெளியுறவு அமைச்சருக்கு இணையான பதவி)

கடந்தவாரம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த டில்லர்சன், தாம் பதவி விலகத் திட்டமிடுவதாக வலம் வரும் செய்திகளை மறுத்தார். ஆனால், கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிறகு, டிரம்பை மூர்க்கர் என்று டில்லர்சன் கூறியதாக வெளியான செய்தியை அவர் மறுக்கவில்லை.

நேரத்தை வீணடிக்கிறார்

ஏற்கெனவே ஒருமுறை வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை செய்ய முயன்று நேரத்தை வீணடிப்பதாக ட்வீட் செய்திருந்தார் டிரம்ப்.

வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைகளை எவ்வளவுதூரம் மிகக் குறைவாக டிரம்ப் புரிந்துகொள்கிறார் என்பதைப் பார்த்து டில்லர்சன் அதிர்ச்சி அடைந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

சந்திப்புகளின்போது டில்லர்சனின் உடல்மொழியால் டிரம்ப் எரிச்சல் அடைந்திருப்பதாகவும் அதே நாளிதழ் செய்தி வெளியிட்டது.