அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக, கடும் இழுபறி நிலை!

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

batti-name-board

மட்டக்களப்பு அரச அதிபராகப் பணியாற்றிய பி.எம்.எஸ் சார்ள்ஸ் அண்மையில் சுங்கப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, மட்டக்களப்பு அரச அதிபர் பதவி வெற்றிடமாக உள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கு சிறிலங்கா நிர்வாக சேவை தரம்-1ஐ சேர்ந்த மூன்று அதிகாரிகளின் பெயர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்திருந்தது. அவர்கள் சிறிலங்காவின் முக்கிய அமைச்சுக்களில் பணியாற்றுகின்றனர்.

எனினும், சிறிலங்கா அரசாங்கம் கிழக்கு மாகாணசபையில் உள்ள மற்றொரு நிர்வாகசேவை அதிகாரியை அந்தப் பதவிக்கு நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. குறித்த அதிகாரியின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையிலேயே அவரை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ஆகியோர் மூன்று பேரின் பட்டியலை உள்துறை அமைச்சின் செயலர் நீல் டி அல்விசிடம் தமது பரிந்துரைகளை செய்திருந்தனர்.

கடந்தவாரம் மாவட்ட அரச அதிபரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு இடம்பெற்றது.

சிறிலங்கா அரசினால் முன்மொழியப்பட்டவர் உள்ளிட்ட இரண்டு மேலதிக நிர்வாக சேவை அதிகாரிகளும் நேர்காணல் செய்யப்பட்டனர். எனினும் எவரும் தெரிவு செய்யப்படவில்லை.

இதனால் கடந்த மாதம் 29ஆம் நாளில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட அரசஅதிபர் பதவி வெற்றிடமாக உள்ளது.