பிரபாகரனின் தியாகம் ஐ.நாவில் – இடைக்கால அறிக்கை ஆயுதமாக மாறியது

போர்க்குற்றம், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு ஆகிய விசாரணைகளில் இருந்து நல்லாட்சி அரசாங்கம், இலங்கை அரசு என்ற கட்டமைப்பை சாணக்கியமாக மீட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பதாக செய்தியாளர் கூறினார்.

leader-v-prabakarans-heros-day-speech-20021

சட்டத்தரணிகளான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை பயன்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாணக்கியமாக இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்த இரத்தக் கறையை நீக்கிவிட்டார் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியதாக செய்தியாளர் கூறினார்.

இலங்கை நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சட்டத்தரணி சுமந்திரன், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் முன்னிலையில் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபைக்கும் சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.

ஆனால், இவ்வாறு ஐ.நாவில் நம்பிக்கை வெளியிட்டதை சுமந்திரன் ஒப்புக்கொள்ளப் போவதில்லை எனவும் கூறிய விமர்சகர்கள், வாக்குகளை பெறுவதற்காக மக்கள் முன்னிலையில் வீரவசனங்களையே, அவர் பேசுவார் எனவும் சுட்டிக்காட்டினர்.

ஆகவே இரட்டை முகம் கொண்ட தமிழ் பிரதிநிதிகளை வைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் ஏற்படுத்தி விட்டதாக, சர்வதேச அரசங்கில் அறிவித்துவிட்டார் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

1965ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்த சில தமிழ் தலைமைகளின் வழித்தோன்றல், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தமிழரசுக் கட்சி என்ற ஆதிக்க சக்தியாக உருவெடுத்து, 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தையே சர்வதேச அரங்கில் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தின் தோல்வி, ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. அந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தில் சரிபிழை இருக்கலாம். ஆனாலும் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் அழிவுடன், 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் இருந்தும் தமிழ் பிரதிநிதிகளினால் காட்டிக் கொடுக்கப்பட்டமை கொடூரமானது எனவும் விமர்சகர்கள் கூறியதாக செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் சுமந்திரன் நியாயப்படுத்தியமை முள்ளிவாய்க்கால் அழிவை விடக் கொடூரமான செயல் என்றும் விமர்சகர்கள் கவலை வெளியிட்டனர்.

ஸ்பெயினில் இருந்து கற்றலோனியா, ஈராக்கில் இருந்து குர்திஸ்த்தான் ஆகிய பிராந்தியங்களில், மக்கள் ஒர் அணியாக ஒன்று கூடி ஜனநாயக வழியில் சுதந்திர தாயகத்தை எவ்வாறு உருவாக்கினார்களோ, அதை விட இன்னும் சுலபமான முறையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேசம் அங்கீகரிக்கக்கூடிய வழிவகைகள் இருந்தும் அது தவறவிடப்பட்டுள்ளது.

பிரபாகரனும் போராளிகளும் செய்த தியாகம் ஐக்கிய நாடுகள் சபையில், புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கை என்ற ஆயுதத்தினால் குத்திக்குதறப்பட்டுள்ளது. அந்த ஆயுதத்தை இயக்கியவர் பிரதமர் ரணில். அவர் 2002ஆம் ஆண்டு அவ்வாறான ஆயுதத்தை இயக்க ஆரம்பித்து 2017இல் வெற்றி கண்டுள்ளார் என விமர்சகர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

ஆகவே தமிழர்களை யுத்தத்தில் மஹிந்த ராஜபக்ச 2009இல் வெற்றிகொண்டார். அரசியல் ரீதியாக பிரதமர் ரணில் 2017இல் வெற்றி கொண்டார் என விமர்சகர்கள் எடுத்துக்கூறியுள்ளனர்.