கொடுத்த பரிசை திரும்பி கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்! இலங்கையில் விசித்திர வழக்கு

பக்கத்து வீட்டில் பிறந்த குழந்தையொன்றுக்கு தங்கத்திலான தாயத்தை பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் சமாதான நீதவான் ஒருவர் பரிசாக வழங்கியிருந்தார்.

gold759

சமாதான நீதவான் குடும்பமும் பக்கத்து வீட்டு ஆசிரியர் தம்பதியினரும் மிகவும் நட்புறவோடு பழகி வந்தனர்.

ஆசிரியர் தம்பதியினருக்கு 1 ½ வருடத்திற்கு முன்னர் பிறந்த குழந்தைக்கு சமாதான நீதவான் தங்கத்திலான தாயம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த இரு குடும்பத்தின் காணிகளின் நடுவில் வேறொருவருக்குச் சொந்தமான காணி ஒன்று இருந்துள்ளது.

இந்தக் காணியை சொந்தமாக்குவதற்கு எண்ணிய சமாதான நீதவான், தனது நண்பனான ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்த நண்பரை அழைத்து குறித்த காணியை இரு குடும்பங்களும் இணைந்து வாங்குவதற்கு சம்மதம் கேட்டுள்ளனர்.

அதற்கு ஆசிரியர் தனக்கும் தனது மனைவிக்கும் தற்போதுள்ள காணி போதுமானது, ஆகவே குறித்த காணி வேண்டாம் எனக் கூறி பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த காணியை வாங்குவதற்கு திட்டமிட்ட சமாதான நீதவான் இந்தக் காணியை சுற்றி முட்கம்பி வேலியும் அடைத்துள்ளார்.

இந்தக் காணி ஊடாக வயல் நிலங்களுக்குச் சென்ற மக்கள் சமாதான நீதவானுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில், நண்பர்களாக இருந்த நாங்கள் எதிரிகளாகப் போயுள்ளோம். சமாதான நீதவான் 1½ வருடங்களுக்கு முன்னர் அன்பளிப்பாக எனது பிள்ளைக்கு கொடுத்த தாயத்தை திருப்பித் தருமாறு குறுந்தகவல் அனுப்பியும் பொலிஸார் மூலமும் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, ஆசிரியர் குடும்பம் தங்களின் 1½ வயது பிள்ளை அணிந்திருந்த தங்கத் தாயத்தை கழற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார்.

எனினும், குறித்த தாயத்தின் பெறுமதி 18 ஆயிரம் எனவும் இதன் பற்றுச்சீட்டை தருமாறும் சமாதான நீதவான் ஆசிரியர் குடும்பத்திடம் கேட்டுள்ளார்.

அன்பளிப்பாகக் கொடுத்ததனால் அதன் பற்றுச்சீட்டை பாதுகாப்பாக வைக்கவில்லை என ஆசிரியர் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

தாயத்தை கொடுத்த பின்னர் பற்றுச்சீட்டு எதற்கு என பொலிஸார் வினவிய போது, அதனை வாங்கிய இடத்தில் கொடுத்து பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக என சமாதான நீதவான் குறிப்பிட்டுள்ளார்.