ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கைக்கு எதிரான பரப்புரை மேற்கொள்வதற்கு சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூவர் சென்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச் சாட்டுகளை முன்வைப்பதற்காக பிரபாகரனின் மைத்துனர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு சென்றுள்ளார்.
ஜெனீவாவை நேற்றைய தினம் வந்தடைந்த சிவாஜிலிங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் மூவரும் ஜெனீவா சென்றுள்ளனர்.
சிவாஜிலிங்கம் போன்றே விடுதலைப்புலிகளின் ஆறு அமைப்புகளும் ஜெனீவாவுக்கு வருகை தந்துள்ள அதேவேளை, அவர்கள் ஒன்றிணைந்து நேற்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 22ஆம் அறையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அதன்போது இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ஜெனீவா மனித உரிமைகள் அமர்வானது கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளும் உரையாற்றவுள்ளதுடன், இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.







