பௌத்தர்கள் என்றால் இனவாதிகள் என்ற தீர்க்கமான முடிவுக்கு வர மியன்மாரையும் ஒரு சிறந்த உதாரணமாகக் கொள்ள முடியும்.
இலங்கையில் பௌத்த பேரினவாதிகளால் தமிழர்களின் சுதந்திரத்துக்கான மூச்சுக்காற்று எவ்வாறு நசுக்கப்பட்டதோ, அவ்வாறு மியன்மாரில் இஸ்லாமியர்களின் குரல்வளை நசுக்கப்படுகிறது.
மியன்மார் பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. இலங்கையில் சிறுபான்மையினராக தமிழர்கள் உள்ளதைப்போல் மியன்மாரில் சிறுபான்மையினராக ரோஹிங்கிய இனத்து முஸ்லிம்கள் மியன்மார் – பங்களாதேஷ் எல்லையில் உள்ள ‘ரக்கினே’ எனும் மாகாணத்தில் உள்ளனர். ரோஹிங்கியர்களின் பூர்வீகம் மியன்மாருக்கானது அல்ல. அவர்கள் பங்களாதேஷைச் சார்ந்தவர்கள். பங்களாதேஷில் இருந்து சில தசாப்தங்களுக்கு முன்னர் அகதிகளாகச் சென்று குடியேறிய அவர்களை, மியன்மார் ஆட்சியாளர்கள் தத்தமது அரசியல் இருப்பைத் தக்க வைப்பதற்காக இனச் சுத்திகரிப்பை செய்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
எனவே மியன்மார் இராணுவத்துக்கு எதிராக ரோஹிங்கியர்கள் சிலர் ஆயுதம் ஏந்திய போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தப் பின்னணியிலேயே அவர்கள் மீதான வதை காலாகாலமாகத் தொடர்ந்து வருகிறது.
ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் மீது மியன்மார் அரச படைகள் மேற்கொள்ளும் இனச் சுத்திகரிப்பைக் கண்டித்து ரோஹிங்கிய ஆயுதக் குழுவொன்று கடந்த மாதம் 25ஆம் திகதி தாக்குதலை நடத்தியது. அதில் 10 சிப்பாய்கள் உயிரிழந்தனர். இதையடுத்தே ஒட்டுமொத்த ரோஹிங்கியர்களையும் ஒரே தராசில் வைத்து தனது மனித வேட்டையை கொடூரமாக நடத்தி வருகிறது மியன்மார்.
சிறுவர் பாலியல் துர்நடத்தை, சிறுவர் பாலியல் வன்புணர்வு, வன்புணர்வு, சிறுவர் கொலைகள், கொலைகள் சித்திரவதை என்று ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் அனுதினம் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பிலான இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது மியன்மாரில் இருந்து தமது உயிரைக் கையில் பிடித்தபடி பங்களாதேஷ் நோக்கி ஓடுபவர்களை பங்களாதேஷ் அவ்வளவு இலகுவில் அனுமதிப்பதில்லை. அது மீண்டும் மியன்மாரை நோக்கி அவர்களை அடித்து விரட்டுகிறது.
இது தொடர்பான விடயங்களை பன்னாட்டு ஊடகங்கள் பலவும் ஆதாரப்படுத்தியுள்ளன. பல ரோஹிங்கியர்களுக்கு மியன்மார் – பங்களாதேஷ் எல்லையில் உள்ள சகதி நிலம் மனிதப் புதைகுழியாக மாறிவிட்டது.
மியன்மார் தனது எல்லைகளை ஆசியாவின் இருபெரும் ஜாம்பவான்களான இந்தியா மற்றும் சீனாவுடனும் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் படுகொலைகளை தட்டிக்கேட்க வேண்டிய இந்த இரு நாடுகளும், மியன்மாருக்கு பக்கவாத்தியம் இசைக்கின்றனவே தவிர அதை அதட்டுவதற்கு முன்வரவில்லை.
காரணம் சீனா அல்லது இந்தியா இவற்றில் ஏதேனும் ஒன்று ஆசியாவின் ஜாம்பவானாக உருவெடுக்க வேண்டுமாயின் அதற்கு ஒரு ஆசிய நாடு என்ற வகையில் மியன்மாரின் ஆதரவு தேவை.