புதிய அரசமைப்பு மீது எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வஜன வாக்கெடுப்பு

புதிய அரசமைப்பு மீது எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

RW01202015P_3

அந்தக் கால எல்லையை இலக்குவைத்து புதிய அரசமைப்பை தயாரிக்கும் பணியை விரைவுப்படுத்தியுள்ள அரசு, இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

புதிய அரசமைப்பை 2017 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுமீது இராஜதந்திர மட்டத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றாவிட்டால் இனி வரும் காலப்பகுதியில் அரசுக்கு அரசியல் – பொருளாதார ரீதியில் நெருக்கடி ஏற்படும் என புலனாய்வு அறிக்கைகளும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளது. இதன்போது எதிரணியும், கடும் போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகளும் அரசமைப்பை மையப்படுத்தியே பரப்புரையை முன்னெடுக்க உத்தேசித்துள்ளன.

இவை உட்பட மேலும் சில முக்கிய விடயங்களைக் கருத்திற்கொண்டே சர்வஜன வாக்கெடுப்பை நவம்பரில் நடத்தி முடிப்பதற்கு கூட்டரசு தீர்மானித்துள்ளது.

புதியதொரு அரசமைப்பு தயாரிக்கப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.

இந்தப் பணியை முன்னெடுப்பதற்காக முழு நாடாளுமன்றமும் அரசமைப்பு நிர்ணய சபையாக மாறியது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டதுடன், அதற்கு உதவிகளைச் செய்வதற்காக 6 உபகுழுக்களும் அமைக்கப்பட்டன. மக்களிடம் கருத்துகளும் பெறப்பட்டன.

உப குழுக்களின் இடைக்கால அறிக்கைகள், மக்களின் கருத்துகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் புதிய அரசமைப்பை இறுதிப்படுத்தும் பணி இடம்பெறும் என்றும் தெரியவருகின்றது.

புதியதொரு அரசமைப்பை நிறைவேற்றி அமுல்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவும் அவசியமாகும்.