நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன்- கோத்தாபய ராஜபக்ச

நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

gotabhaya1

பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ச தலைமையில், ‘எலிய- ஒளிமயமான அபிலாசைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றுமாலை இந்த அமைப்பின் தொடக்கவிழா இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மற்றும் கூட்டு எதிரணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் இராஜதந்திரிகளான தாமரா குணநாயகம், கலாநிதி தயான் ஜெயதிலக, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ச,

“பிரிவினைவாதிகள் தீவிரவாதத்தின் ஊடாக  அடைய முடியாததை, புதிய அரசியலமைப்பு வழங்கும்.  இதனை தோற்கடிக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்கள், ஒரு பகுதி வெளிநாட்டு சக்திகளை திருப்திப்படுத்தவே இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போருக்குப் பிந்திய சிறிலங்காவை இனரீதியாகப் பிரிக்கவே, தற்புாதைய கூட்டு அரசாங்கம் வழிதேடுகிறது. பிரிவினைவாத ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தும் அரசாங்கத்தின் இந்த முயற்சியை மக்கள் எதிர்க்க வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு எலிய அமைப்பு அனுமதியாது.

நாட்டின் ஒன்றையாட்சியைப் பாதுகாப்பதற்கு, புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் வழி நடத்த வேண்டியது முக்கியம்.

அரசியலமைப்பு என்ற போர்வையில் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் போது,  அமைதியாக இருக்க முடியாது.

இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளை பாதுகாக்க முற்பட்ட நாடுகளே இந்த அரசியலமைப்பு உருவாக்கத்துக்குப் பின்னால் இருக்கின்றன.

புதிய அரசியலமைப்பை எலிய எதிர்க்கும். தீவிரவாதத்தை தோற்கடித்து பெற்றதை பாதுகாக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இராணுவத்தினர் பெரும் தியாகங்களை செய்துள்ளனர். நாட்டின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் எந்த முயற்சிகளுக்கும், எந்த விலைகொடுத்தாவது எதிர்க்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.