இந்திய அணிக்கெதிரான தொடரில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்ததால், 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்க நேரடியாக தகுதிபெற வேண்டுமாயின் இந்திய அணிக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்திருந்தது.
எனினும், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி, 4 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
இதன்காரணமாக 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை உறுதிப்படுத்த இலங்கை தவறியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
எனினும், இந்தப் போட்டிகளில் இலங்கை அணி தோல்வியை சந்திருத்தாலும்கூட, மேற்கிந்திய தீவுகள் அணி முகம்கொடுக்கவுள்ள 6 போட்டிகளிலும் வெற்றியை பதிவுசெய்தால்தான் இலங்கை அணியின் வாய்ப்பு பறிபோகும்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி 88 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தால் 90 புள்ளிகளைப் பெற்று 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளில் கலந்து கொள்ளும் தகைமையை இலங்கை அணி பெற்றிருக்க முடியும்.
எனினும், இந்தத் தொடரில் எந்தவொரு போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெறத் தவறுமாயின், 2 புள்ளிகளை இழந்து 86 புள்ளிகளை பெறும் நிலை ஏற்படும்.
இந்த நிலையில், தற்போது புள்ளிப்பட்டியலில் இலங்கை அணியைவிட 10 புள்ளிகள் பின்னிவையில், 78 புள்ளிகளுடன் 9 ஆம் இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, உலகக் கிண்ண போட்டிகளுக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பு செல்லும்.
குறித்த காலப்பகுதிக்குள் மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடன் 6 ஒருநள் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது.
அந்த ஆறு போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், 8 ஆம் இடத்துக்கு முன்னேறும்.
இதனூடாக மேற்கிந்திய தீவுகள் அணி, 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும்.