ஆவா குழு என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது!

வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு துறையினரும், சட்டத்துறையினரும் எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் அவை அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கு அப்பால் இருக்க வேண்டும் எனவும் ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

download (21)

ஜனநாயக போராளிகள் கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன்போதே ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக செயலாளர் துளசி கருத்துத் தெரிவிக்கையில்,

ஆவா குழு என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி வெளிப்படுத்தப்படவேண்டும்.

செல்களை தோளில் சுமந்து சென்று தாக்குதல் நடத்தி ஜனநாயக பாதைக்கு வந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு கத்திகளுடன் அலைய வேண்டிய தேவையில்லை.

ஆயுதக் கப்பல்களையும் சட்ட விரோத கப்பல்களையும் பிடித்தவர்களுக்கு குற்றச்செயல்களை செய்தவர்களை பிடிப்பது கஸ்டம் இல்லை.

கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெறும் பட்சத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேநேரம் வடக்கு, கிழக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கும் பணிகளை ஜனாநாயக போராளிகள் அமைப்பு மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு புலம்பெயர் அமைப்புகள் உட்பட மாவீரர்களை நேசிக்கும் அனைவரும் உதவ வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான பிராந்திய இணைப்பாளர் க.பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கதிர், கொள்கை முன்னெடுப்பு செயலாளர் கர்த்தகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.