அராபிய வளைகுடா பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்றான ஈரான் நாடு சில தினங்களுக்கு முன்பு செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட் சோதனையை மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்தது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை முயற்சி என்று அமெரிக்கா தெரிவித்தது.
அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 14-7-2015 அன்று அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கக்கூடாது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட சர்வதேசப் பொருளாதார தடைகள் விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதிமொழியை மையமாக வைத்து ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில்தான், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறும் வகையில், சமீபத்தில், 250 கிலோ எடையுள்ள வெடிபொருட்களுடன், 500 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து சென்று, எதிரியின் இலக்கை நிர்மூலம் ஆக்கவல்ல ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக சோதித்தது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக ஈரான் மீது அமெரிக்கா கடந்த புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதும் இந்த தடை சட்ட வடிவம் பெறும்.
இதற்கிடையே, ஈரான் நாட்டை ஒட்டியுள்ள கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பல்களும், போர் விமானங்களும் அத்துமீறி நுழைந்து மிரட்டி வருவதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின்மீது கடந்த மாதம் அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்ததால் ஈரான் கடும் ஆத்திரம் அடைந்துள்ளது.
இதுதொடர்பாக, ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை செய்தியாளர் பஹ்ராம் கசேமி முன்னர் கூறுகையில், ‘அமெரிக்காவின் செயல் ஏற்புடையதல்ல, எங்களது ஏவுகணை திட்டங்களை மிக வீரியமாக நாங்கள் செயல்படுத்துவோம்’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரான் நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் ஏவுகணை திட்ட ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு பாராளுமன்றத்தில் அரசின் சார்பில் இன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்காக 52 கோடி அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவை ஆதரித்து மொத்தம் உள்ள 244 பாராளுமன்ற உறுப்பினர்களில் 240 பேர் வாக்களித்தனர். இந்த தொகையில் 26 கோடி டாலர்கள் ஏவுகணை தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும், 260 டாலர்கள் வெளிநாடுகளில் உள்ள ஈரான் படைகளின் பராமரிப்புக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.
இந்த மசோதா நிறைவேறியவுடன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர் அலி லரிஜானி, ‘எங்கள் மண்டலத்தில் அமெரிக்கா நடத்திவரும் சாகசங்களையும், தீவிரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இது முதல்கட்ட நடவடிக்கை என்பதை அமெரிக்கர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.