வித்தியாவின் கொலை வழக்கில் என்னையும் இணைத்து ஊடகங்களின் மரியாதையை அவர்களே தாழ்த்திக்கொள்கிறார்கள்

தமிழ் பேசும் மக்களான தமிழ் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் அமைக்கப்படும் அரச அலுவலகங்களுக்கான பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியிருக்கின்றார்.

images (1)

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் திறந்துவைக்கப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் உப அலுவலகத்தின் பெயர் பலகையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்ததை அமைச்சர் முன்னிலையில் சுட்டிக்காட்டிய நிலையிலேயே விஜயகலா மகேஸ்வரன் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

தனது இந்தக் கோரிக்கையை இனவாதமாகக் கருதத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக தென் பகுதியில் பெயர் பலகைகளில் சிங்கள மொழிக்கு வழங்கப்படும் முன்னுரிமையை தமிழர் தாயகப்பிரதேசங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றும் தெரிவித்திருக்கின்றார்.

கடந்தகால ஆட்சியின்போது மறுக்கப்பட்டிருந்த ஊடக சுதந்திரத்தை மைத்ரி – ரணில் தலைமையிலான தமது தேசிய அரசாங்கம் உறுதிப்படுத்தியிருப்பதாக பெருமிதம் வெளியிட்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எனினும் இந்த ஊடக சுதந்திரத்தை சில ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

புங்குடு தீவு மாணவியை கூட்டுப் பாலியலுக்கு உட்படுத்தி கொடூரமாக படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் சுவிஸ் குமாரை விடுவிப்பதற்காக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை தொடர்புபடுத்தி இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அண்மைக்காலமாக பதவிடப்பட்டுள்ள தகவல்களை சுட்டிக்காட்டி கவலை வெளியிட்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களின் இந்த நடவடிக்கைகள் மூலம் ஊடகங்களின் மரியாதையை அவர்களே தாழ்த்திக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.