ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகிக் கொண்டமையானது வரவேற்கத்தக்கது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் எடுத்த முடிவினை வரவேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்,
அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியிருப்பது ஒரு எடுத்துக்காட்டாகும்.
கடந்த ஆட்சியில் எவரும் இவ்வாறு பதவி விலகவில்லை. எனக்கு எதிராக சோதனை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை இலகுபடுத்துவதற்காக அமைச்சர் ரவி பதவி விலகியிருப்பது நல்லாட்சியை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது மத்திய வங்கி பிணைமுறிகள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கூட்டு எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும் அமைச்சர் தான் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
முன்னதாக, அமைச்சர் மீதான இந்தக் குற்றச்சாட்டினால் அரசாங்கம் நெருக்கடியில் இருப்பதாகவும், எனவே அமைச்சரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.