சல்லித்தீவில் சுற்றுலா மையம் அமைப்பதில் மோசடி

மட்டக்களப்பு வாகரை சல்லித்தீவில் சுற்றுலாத்துறை மையம் அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 கோடியே 50 இலட்சத்திற்கான அபிவிருத்தி நடைபெறவில்லை என சுற்றுலா துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு சுற்றுலாத்துறை அமைச்சு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை சல்லித்தீவில் சுற்றுலாத்துறை மையம் அமைப்பதற்கு 2016 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் சுற்றுலாத்துறை அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 கோடியே 50 இலட்சத்திற்கான அபிவிருத்தி திட்டம் முழுமையாக நிறைவேற்றபடாமை குறித்து கடந்த 27.04 .2017 அன்று அமைச்சில் இருந்து வருகைத்தந்த விசாரணை குழுவின் அறிக்கையின் பிரகாரம் சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

விசாரணை அறிக்கையின் படி குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட பல விடயங்கள் நடைமுறைப் படுத்தப்படவில்லை எனவும் அதற்கான காரணங்களையும் விளக்கங்களையும் உடனடியாக அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு மட்டு அரசாங்க அதிபருக்கு சுற்றுலாத் துறை அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது.

2016 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சல்லித்தீவில் சுமார் 25 மில்லியன் அதாவது 2 கோடி 50 இலட்சங்கள் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட வேண்டிய சுற்றுலா மையம் இதுவரை உரியமுறையில் அமைக்கப்படவில்லை எனவும் அது முழுமையாக முடிவுறுத்தப்படாது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக அன்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சு குறித்த திட்டம் முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளது.

அபிவிருத்தித் திட்டத்தில் சொல்லப்பட்ட எந்த திட்டமும் முறையாக செய்யப்படவில்லை என்பதோடு தொங்கு பாலம், மிதவை படகு, தங்குமிடம், சூரிய ஒளியில் இயங்கும் மின்குமிழ் உள்ளிட்ட பல செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் பொது அமைப்புக்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஆகியவற்றிடம் கருத்துக்கள் பெறப்படவில்லை என்பதுடன் இது குறித்து அவர்களுக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

va6

எனவே மேற்குறித்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதில் அளிக்குமாறு அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடிதம்மூலம் அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்மூலம் குறித்த திட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

குறித்த திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு அதற்கான அதிகாரிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.