கொழும்பு டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 50/2; இந்தியா 622-ல் டிக்ளேர்

கொழும்பு டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 50/2; இந்தியா 622-ல் டிக்ளேர்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் புஜாரா, ரகானே சதமும் லோகேஷ் ராகுல், அஸ்வின், சகா மற்றும் ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர். இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஹெராத் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கருணாரத்னே, உபுல் தரங்கா ஆகியோர் களம் இறங்கினார்கள். உபுல் தரங்கா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி வெளியேறினார். அஸ்வின் பந்தில் ஷார்ட் லெக் திசையில் நின்ற லோகேஷ் ராகுல் அபாரமாக கேட்ச் பிடித்தார்.


உபுல் தரங்கா அடித்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்த லோகேஷ் ராகுல்

அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் சண்டிமல் உடன் ஜோடி சேர்ந்தார். கருணாரத்னே 25 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு மெண்டிஸ் உடன் சண்டிமல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.

மெண்டிஸ் 16 ரன்களுடனும், சண்டிமல் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.