சீன அரசிடம் அம்பாந்தோட்டை இந்தியா கவலை?

துறைமுகங்களைக் கட்டுப்படுத்தும் சீன அரசிற்குச் சொந்தமான சீன மேர்ச்சன்ட்ஸ் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளர்களால் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

h-a

சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 85 சதவீத உரிமையை 99 ஆண்டுகாலத்துக்கு  1.12 பில்லியன் டொலர் குத்தகைக்குப் பெற்றுக் கொள்வதற்கு சீன நிறுவனம் இணங்கியுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன நிறுவனத்தால் உடன்பட்ட இக்குத்தகைத் தொகையின் 49 சதவீதம் அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக சேவைகள் (HIPS)  என்கின்ற புதிய நிறுவனத்தின் மீது முதலீடு செய்யப்படுவதுடன் இதன் பெரும்பான்மைப் பங்குகளை சிறிலங்கா அரசாங்கம் கட்டுப்படுத்தும்.

சீன நிறுவனத்தால் வழங்கப்படும் குத்தகையில் மீதித் தொகையான 146.342 மில்லியன் டொலர் துறைமுகத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்படும். இவ்விரு நிறுவனங்களும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் செயற்பாடுகளை இணைந்து மேற்கொள்ளும்.

HIPS நிறுவனமானது இதன் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும். அதாவது இந்த நிறுவனம் அல்லது சிறிலங்கா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் இராணுவ நடவடிக்கைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பதே இதன் கருத்தாகும்.

சீனாவின் இந்த அறிக்கையானது இந்தியா, சிறிலங்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளினதும் சில சந்தேகங்களைத் தெளிவாக்குகின்ற ஒன்றாகக் காணப்படுகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தனது வர்த்தக மற்றும் கேந்திர முக்கியத்துவங்களுக்காகப் பயன்படுத்துவதில் நீண்ட காலமாக ஆர்வம் காண்பிக்கின்றது.